மாவட்ட செய்திகள்

கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் திடீர் ஓய்வு + "||" + Additional Police DGP Bhaskarrao abruptly retired

கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் திடீர் ஓய்வு

கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் திடீர் ஓய்வு
ஓய்வு பெறுவதற்கு 3 ஆண்டுகள் உள்ள நிலையில், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் நேற்று திடீரென்று விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர், காங்கிரசில் சேர்ந்து அரசியலில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு:

பாஸ்கர்ராவ் விருப்ப ஓய்வு

  கர்நாடக மாநில ரெயில்வே கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் பாஸ்கர்ராவ். கர்நாடகத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளில் அவரும் ஒருவர் ஆவார். கடந்த 1990-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்ஜை சேர்ந்தவர் தான் பாஸ்கர்ராவ். பெங்களூரு போலீஸ் கமிஷனராக ஒரு ஆண்டு பணியாற்றி இருந்தார். கடந்த ஆண்டு (2020) ஜூலை மாதம் தான், போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு இருந்தார்.

  பின்னர் உள்நாட்டு பாதுகாப்பு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக அவர் நியமிக்கப்பட்டு இருந்தார். தற்போது ரெயில்வே கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக பதவி வகித்து வந்த பாஸ்கர்ராவ் நேற்று திடீரென்று விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதாவது தான் விருப்ப ஓய்வு பெறுவதாக கூறி தலைமை செயலாளர் ரவிக்குமார் மற்றும் மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதி பாஸ்கர் அனுப்பி வைத்துள்ளார்.

இன்னும் 3 ஆண்டுகள்...

  பாஸ்கர்ராவ் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. அதற்குள் அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருப்ப ஓய்வு பெறுவதாக பாஸ்கர்ராவ் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்திருந்தாலும், அதனை அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிகிறது.

  இன்னும் ஓரிரு நாட்களில் அவரது விருப்ப ஓய்வு ஏற்றுக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியான பாஸ்கர்ராவ், பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த ஒரு ஆண்டில் ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்கி இருந்தார்.

காங்கிரசில் சேர முடிவு

  பணிக்காலம் இன்னும் 3 ஆண்டுகள் இருக்கும் நிலையில் கூடுதல் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ், எதற்காக விருப்ப ஓய்வு பெறுகிறார் என்பது பற்றிய சரியான காரணம் தெரியவில்லை. அதுபற்றி பாஸ்கர்ராவும் எந்த தகவலையும் வெளியிடவில்லை. பெங்களூரு போலீஸ் கமிஷனராக இருந்த போது மக்களிடையே நல்ல செல்வாக்கு பாஸ்கர்ராவுக்கு கிடைத்திருந்தது.

  இதையடுத்து, அவர் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், காங்கிரசில் சேர்ந்து அடுத்து நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பெங்களூரு பசவனகுடி தொகுதியில் போட்டியிட பாஸ்கர்ராவ் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.