மாவட்ட செய்திகள்

சென்னையில் 1,600 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் + "||" + Mega vaccination camp today at 1,600 locations in Chennai

சென்னையில் 1,600 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்

சென்னையில் 1,600 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
சென்னையில் இன்று 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்றும், ஒரு மாதத்திற்குள் சென்னையில் உள்ள 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
விழிப்புணர்வு ஆய்வு

கொரோனா 3-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு கடை வீதியில் முககவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஆய்வை நேற்று மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சென்று அனைவரும் முககவசம் அணிந்துள்ளனரா? கடை ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்தனர். அப்போது, தடுப்பூசி போடாத கடை ஊழியர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மெகா தடுப்பூசி முகாம்

ஆய்வுக்கு பின்னர், ககன்தீப் சிங் பேடி, சங்கர் ஜிவால் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிப்பார்கள்.

சென்னையில் நாளை (அதாவது இன்று) 1,600 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஏராளமானோர் கோவேக்சின் தடுப்பூசி 2-வது டோஸ் போடாமல் இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். தற்போது, 1 லட்சத்து 20 ஆயிரம் டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும், 1 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியும் கையிருப்பு உள்ளன. பொதுமக்கள் அனைவரும் மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நாளை (இன்று) நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் சென்னையில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

8,881 கடைகளுக்கு அபராதம்

சென்னையில் கடந்த சில மாதங்களில் 8,881 கடைகளில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 4 கோடியே 42 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 5,756 பதிவு செய்யப்பட்ட திருமணங்களில், 510 திருமண நிகழ்வுகளில் விதிமுறைகளை மீறியதற்காக வழக்கு பதியப்பட்டு 8 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறும் போது, “கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.4½ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 65 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன“ என்றார்.

இதே போன்று, மெரினா கடற்கரை, சென்டிரல் ரெயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் மழை பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
2. தொடர் மழை: சென்னை வாகன போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்
சென்னையில் தொடர் மழையால் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
3. சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்...!!
சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
4. சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..!!
சென்னையில் தற்போது பல்வேறு இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
5. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைவு
ஒரு கிராம் தங்கம் இன்று ரூ 4,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.