மாவட்ட செய்திகள்

பெங்களூருவில் 5 மாடி கட்டிடம் இடிந்ததால் பரபரப்பு + "||" + Excitement as the 5 storey building collapsed

பெங்களூருவில் 5 மாடி கட்டிடம் இடிந்ததால் பரபரப்பு

பெங்களூருவில் 5 மாடி கட்டிடம் இடிந்ததால் பரபரப்பு
பெங்களூருவில் தொடரும் சம்பவமாக 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. முன்எச்சரிக்கையாக வீட்டில் இருந்தவர்கள் வெளியேறியதால் உயிர் தப்பினர்.
பெங்களூரு:

5 மாடி கட்டிடம்

  பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கஸ்தூரிநகர் அருகே டாக்டர்ஸ் லே-அவுட், 2-வது கிராசில் தரை தளத்துடன் கூடிய 5 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் ஆயிஷா பெய்க் என்பவருக்கு சொந்தமானதாகும். அந்த கட்டிடத்தில் 8 வீடுகள் உள்ளன. அவற்றில் 3 வீட்டில் மட்டும் குடும்பத்தினர் வசித்து வந்தனர். மற்ற 5 வீடுகளும் காலியாக இருந்தது.

  இந்த நிலையில், நேற்று காலையில் திடீரென்று 5 மாடி கட்டிடத்தின் ஒருபகுதி லேசாக சரிந்தது. இதனால் குடியிருப்பில் வசிக்கும் 3 குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வீடுகளில் இருந்து 3 குடும்பத்தினரும் வெளியே வந்தார்கள். ஆனால் அவா்களது உடைமைகள் வீடுகளிலேயே இருந்தது.

உயிர் சேதம் தவிர்ப்பு

  பின்னர் நேற்று மதியம் திடீரென்று 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து பக்கத்து வீட்டின் மீது சாய்ந்தது. ஆனால் கட்டிடம் இடிந்து முழுவதுமாக கீழே விழாமல் பக்கத்து கட்டிடத்தின் சாய்ந்தபடி நின்றது. அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் காலையிலேயே வெளியே வந்து விட்டதால், அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

  இதுபற்றி அறிந்ததும் ராமமூர்த்திநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் அந்த வழியாக பொதுமக்கள் யாரும் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. முன் எச்சரிக்கையாக அக்கம் பக்கத்தில் வசித்தவர்களும், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்கள். இதுபற்றி அறிந்ததும் மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா, சம்பவ இடத்திற்கு சென்று இடிந்து விழுந்த கட்டிடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

விதிமுறை மீறி கட்டிடம்

  இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் கமிஷனர் கவுரவ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில், "பெங்களூரு கஸ்தூரிநகரில் தரைதளத்துடன் 2 மாடி வீடு கட்டுவதற்கு கடந்த 2012-ம் ஆண்டு உரிமையாளர் அனுமதி பெற்றிருந்தார். 2014-ம் ஆண்டு தான் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாநகராட்சியின் அனுமதியை மீறி 5 மாடி கட்டிடத்தை உரிமையாளர் கட்டி இருந்தார். வீட்டுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை பெற்றுவிட்டு, வேறு ஒருவரிடம் விற்றிருந்தார். ஆனால் மாநகராட்சியிடம் இருந்து என்.ஓ.சி. பெறவில்லை.

  விதிமுறைகளை மீறி கூடுதலாக 2 மாடி கட்டி இருப்பதால், கட்டிடம் சாய்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சிவில் சட்டம் மற்றும் கிரிமினல் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டுள்ளேன். உடனடியாக 5 மாடி கட்டிடம் இடித்து அகற்றப்படும். இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், " என்றார்.

தொடரும் சம்பவங்களால் பீதி

  இதற்கிடையில், அந்த கட்டிடம் முறையான அனுமதி பெறாமலும், 2 மாடிகளை கூடுதலாக கட்டி இருந்தாலும், தரமற்ற கட்டுமான பொருட்களால் கட்டியதாலும், வீடு கட்டிய 7 ஆண்டுகளிலேயே இடிந்து விழுந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பெங்களூரு ஆடுகோடி அருகே லக்கசந்திராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 மாடி பழமையான கட்டிடமும், அதன்பிறகு, டைரி சர்க்கிளில் உள்ள கா்நாடக பால் கூட்டமைப்புக்கு சொந்தமான 3 மாடி கட்டிடமும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகரபாவி அருகே 3 மாடி கட்டிடமும் இடிந்திருந்தது. தற்போது 5 மாடி கட்டிடம் இடிந்துள்ளது. பெங்களூருவில் கட்டிடங்கள் தொடர்ந்து இடிந்து விழும் சம்பவங்களால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் 165 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு- மந்திரி சுதாகர் தகவல்
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது.
2. பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: இன்று இரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
கொரோனா பரவல் அதிகரிப்பால் பெங்களூருவில் இன்று இரவு முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
3. பெங்களூரு: கார், டேக்சி, ஆட்டோக்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் - மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு சிபாரிசு
பெங்களூரு நகரில் கொரோனா பரவலை தடுக்க கார், டேக்சி, ஆட்டோக்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயமாக்க மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு சிபாரிசு தெரிவித்துள்ளது.
4. பெங்களூரு வந்த ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 2 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பா..?
பெங்களூரு வந்த ஜெர்மனி சுற்றுலா பயணிகள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால், அவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
5. ஐஎஸ்எல் கால்பந்து தொடர் : பெங்களூரு - ஒடிசா அணிகள் இன்று பலப்பரீட்சை
பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது