மாவட்ட செய்திகள்

2 அரசு மருத்துவமனைகளில் ரூ.26 லட்சம் காலாவதியான மருந்துகள் பயன்பாடு + "||" + Use of Rs. 26 lakh expired drugs in 2 government hospitals

2 அரசு மருத்துவமனைகளில் ரூ.26 லட்சம் காலாவதியான மருந்துகள் பயன்பாடு

2 அரசு மருத்துவமனைகளில் ரூ.26 லட்சம் காலாவதியான மருந்துகள் பயன்பாடு
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளில் ரூ.26 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளில் ரூ.26 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
பொது கணக்கு குழு ஆய்வு
தமிழக சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் நேற்று தஞ்சை வந்தனர். இந்த குழுவில் தலைவருடன் மொத்தம் 19 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் உறுப்பினர்கள் சிந்தனை செல்வன் (காட்டுமன்னார்கோவில்), பூண்டி கலைவாணன்(திருவாரூர்), ஜவாஹிருல்லா(பாபநாசம்), மாரிமுத்து(திருத்துறைப்பூண்டி), ராஜா (சங்கரன்கோவில்), வேல்முருகன்(பண்ருட்டி), செயலாளர் சீனிவாசன், துணை செயலாளர்கள் தேன்மொழி, ரேவதி ஆகியோரும் உடன் வந்தனர்.
இந்த குழுவினர் நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், அரசு கொறடா கோவி.செழியன் முன்னிலையில் 14 இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள தஞ்சை பழைய பஸ் நிலையம், அரண்மனை வளாகத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சை தெற்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள கூர்நோக்கு இல்லம், அரசினர் குழந்தைகள் இல்லம், கூட்டுறவு காலனியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம், மானோஜிப்பட்டி உப்பரிகை மண்டபத்தில் உள்ள ஆதிதிராவிடர் பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
பஸ் நிலையம்
பின்னர் புதிய பஸ் நிலையம் பின்பகுதியில் உள்ள சமுதாய கூடம், புதிய பஸ் நிலையம், இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம் அருகே கட்டப்படும் பணிபுரியும் மகளிர் விடுதி, ஒரத்தநாட்டில் உள்ள பாரதிதாசன் அரசு கலைக்கல்லூரி, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் கால்நடை பண்ணை, ஒக்கநாடு கீழையூரில் இறவை பாசன திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனை மற்றும் சித்தா மருத்துவமனை ஆகிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டமும் நடத்தினர்.
முன்னதாக குழு தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
14 இடங்களில் ஆய்வு
தஞ்சை மாவட்டத்தில் 14 இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். கடந்த ஆட்சியில் நடந்த தவறுகள், சரியான நிர்வாக திறமையின்மை, அரசு பணம் விரயம் என பல தலைப்புகளில், பொது தணிக்கை குழு அளித்த அறிக்கைபடி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
அதன் அடிப்படையில் எந்தெந்த தவறுகள் களையப்பட வேண்டும். வருங்காலங்களில் தவறுகள் நடக்காமல் இருப்பது எப்படி? இதற்கு யார் பொறுப்பு ஏற்பது? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
தரமாக இல்லை
கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான அரசு கட்டிடங்கள் தரமானதாக இல்லை. தனியார் கட்டித்தரும் அரசு பள்ளி கட்டிடம் தனக்காக சொந்தமாக கட்டுவதுபோல் தரமானதாக கட்டி தந்திருக்கிறார்கள். அது மகிழ்ச்சியைத் தரக்கூடியது. பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் அரசு பணத்தை எடுத்து கட்டுபவர்கள் தரமாக கட்டுவதில்லை. அதே பள்ளியில் அவர்கள் குழந்தை படித்தால் இவ்வாறு தரமற்ற முறையில் கட்டுவார்களா?.
ஒரு பள்ளியில் ஆய்வு செய்த போது கழிவறை முறையாக இல்லை. அங்கு தண்ணீர் வசதி இல்லை. புதர்மண்டி கிடக்கிறது. விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்கும். அதை எப்படி மாணவர்கள் பயன்படுத்த முடியும். கடந்த ஆட்சியில், மருத்துவத்துறையில் காலாவதியான மருந்துகள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை, பொது தணிக்கை குழு இந்த குறைகளை கண்டறிந்துள்ளது.
2 அரசு மருத்துவமனைகள்
இது குறித்து நாங்கள் விசாரித்தபோது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார்கள். ரூ.26.17 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகளை பயன்படுத்தியுள்ளனர். 
குறிப்பாக 2013-14-ம் ஆண்டுகளில் இது நடந்துள்ளது. இந்த மருந்துகளை பயன்படுத்தியவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளதா?, உடல்நிலையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா?, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதா? என கண்டறியப்படும். தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப்பேரவையில் அறிக்கை
தஞ்சை அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளை ஒரு பக்கமும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குழந்தைகளை ஒரு பக்கமும் வைத்திருக்கின்றனர். இரண்டு பேரையும் ஒரே வளாகத்திற்குள் வைத்துள்ளனர். இது மிகப்பெரிய தவறு. சிறையிலிருந்து சிறார்களை பொருத்தவரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அடைத்து வைத்து இருக்கக்கூடாது என்ற விதி உள்ளது.
ஆனால் கூர்நோக்கு இல்லத்தில் 1 மணி நேரம் மட்டுமே வெளியில் அனுமதித்து விட்டு, மீதி நேரம் அடைத்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை சுதந்திரமாக வெளியே விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாங்கள் ஆய்வு செய்து அந்த அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார். 
.இந்த ஆய்வின்போது அன்பழகன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ரமேஷ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.