மாணவியின் லேப்-டாப், செல்போனில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின


மாணவியின் லேப்-டாப், செல்போனில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின
x
தினத்தந்தி 24 Oct 2021 8:43 PM GMT (Updated: 24 Oct 2021 8:43 PM GMT)

பளுகல் அருகே வாலிபர் மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் அவரது ேலப்-டாப், செல்போனில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

களியக்காவிளை:
பளுகல் அருகே வாலிபர் மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்த விவகாரத்தில் அவரது ேலப்-டாப், செல்போனில் முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவி தற்கொலை
குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளையை சேர்ந்தவர் பீனா. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது ஒரே மகள் ஆதிரா (வயது 19). களியக்காவிளையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். 
இந்தநிலையில் ஆதிரா கடந்த 22-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பளுகல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
லேப்-டாப், செல்போன் ஆய்வு
இதற்கிடையே மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மாணவி கடந்த மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருச்சூரை சேர்ந்த வாலிபர் மிரட்டுவதாக புகார் கொடுத்தது தெரிய வந்தது. அந்த புகாரில், ஒரு வாலிபர் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும், அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டதாகவும் கூறியிருந்தார். மேலும், அந்த வாலிபரின் நண்பர் ஒருவரும் தன்னை தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வருவதாகவும் கூறியிருந்ததாக தெரிகிறது. இந்த புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மாணவி ஆதிரா தற்கொலை செய்து கொண்டதால், வாலிபரின் மிரட்டல் காரணமாக அவர் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று மாணவியின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரது லேப்-டாப், செல்போன் மற்றும் பென்டிரைவ்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அவற்றில் சில புகைப்படங்கள், முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 
பரபரப்பு தகவல்கள்
இதில் மாணவியுடன் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவர் பற்றிய பரபரப்பு  தகவல்கள் அதில் இருந்ததாக தெரிகிறது. உடனே போலீசார் அவரை பிடிக்க விரைந்தனர். 
ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்களை அறிந்து கொண்ட வாலிபர் தலைமறைவாகி விட்டார். இதனால், அவரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
2 தனிப்படை அமைப்பு
மேலும் மாணவியுடன் செல்போன் மற்றும் வாட்ஸ்-அப் குரூப்பில் தொடர்பில் இருந்த நண்பர்கள் வட்டாரத்தை பிடித்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டனர். ஆனால் இவர்களில் பலர் செல்போனை சுவிட்ச்- ஆப் செய்துவிட்டனர்.  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், அருளப்பன் ஆகியோர் தலைைமயில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 
மாணவியின் உடல் தொடர்ந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ளது. அவரது தாயார் வெளிநாட்டில் இருந்து வந்த பின்பு மாணவி உடல் ஒப்படைக்கப்படும். பின்னர் சொந்த ஊரான பளுகலுக்கு மாணவி உடல் கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story