மாவட்ட செய்திகள்

ஷாருக்கான் மகனை விடுவிக்க நடந்த ரூ.25 கோடி லஞ்ச பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவு + "||" + inquiry into Rs.25 crore bribery deal

ஷாருக்கான் மகனை விடுவிக்க நடந்த ரூ.25 கோடி லஞ்ச பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவு

ஷாருக்கான் மகனை விடுவிக்க நடந்த ரூ.25 கோடி லஞ்ச பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவு
நடிகர் ஷாருக்கான் மகனை விடுவிக்க நடந்ததாக கூறப்படும் ரூ.25 கோடி லஞ்ச பேரம் விவகாரத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மும்பை, அக்.

நடிகர் ஷாருக்கான் மகனை விடுவிக்க நடந்ததாக கூறப்படும் ரூ.25 கோடி லஞ்ச பேரம் விவகாரத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  

 சொகுசு கப்பல் போதை விருந்து

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாக பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை கடந்த 3-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். தற்போது ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். 

ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் மராட்டிய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி நவாப் மாலிக்கின் உறவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஷாருக்கானின் மகனும் கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வான்கடேயை சிறையில் தள்ளுவேன் என்றும், அவருக்கு எதிராக பல ஆதாரங்கள் இருப்பதாகவும் மந்திரி நவாப் மாலிக் ஆவேசமாக பேசி இருந்தார். 

இந்தநிலையில் சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில்  போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சாட்சியாக சேர்க்கப்பட்டவர் கோசவி. இவர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்ததால், மராட்டிய போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்க தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. 

ரூ.25 கோடி பேரம்

இதற்கு மத்தியில் கோசவியின் மெய்க்காப்பாளராக இருந்த பிரபாகர் சாயில் என்பவர் பொது சாட்சியாக மாறி உள்ளார். அவர் கோசவி மற்றும் சமீர் வான்கடே உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீது பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். ஷாருக்கானின் மகனை போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாகவும், இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு சாட்சியான கோசவி மற்றும் ஷாருக்கான் மேலாளரின் சந்திப்பை தான் நேரில் பார்த்ததாகவும் கூறினார். மேலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே முன்னிலையில் தன்னிடம் 10 வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி கொண்டதாகவும், தற்போது தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறினார். 

மேலும் அவர் நேற்று மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தார். 

விசாரணைக்கு உத்தரவு 

இந்த பரபரப்புக்கு மத்தியில் திடீர் திருப்பமாக சமீர் வான்கடே உள்ளிட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீதான லஞ்ச பேரம் குறித்து, லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த விசாரணையை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைமையக  துணை இயக்குனர் ஜெனரல் மற்றும் தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியுமான ஞானேஸ்வர் சிங் நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுபற்றி ஞானேஸ்வர் சிங் கூறுகையில், “லஞ்ச பேரம் குறித்து எங்களது தென்மேற்கு மண்டல பிரிவில் இருந்து தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. இதுபற்றி நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்படும்” என்றார். 
இதன் மூலம் சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் ஏற்பட்டுள்ள அதிரடி திருப்பம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோர்ட்டில் மனு

இதற்கிடையே வழக்கின் பொது சாட்சி பிரபாகர் சாயில் குற்றச்சாட்டுக்கு எதிராக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் அதன் அதிகாரி சமீர் வான்கடே மும்பை சிறப்பு கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர். 
அதில், சமீர் வான்கடே மற்றும் பிற அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது, திசை திருப்பும் நோக்குடனும், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.