மாவட்ட செய்திகள்

மின்கம்பியில் சிக்கிய காற்றாடியை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவர் பலி + "||" + 9th grade student killed by lightning while trying to pick up a windmill stuck in a power line

மின்கம்பியில் சிக்கிய காற்றாடியை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவர் பலி

மின்கம்பியில் சிக்கிய காற்றாடியை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவர் பலி
மின்சார ரெயில்கள் செல்லும் உயர்அழுத்த மின்கம்பியில் சிக்கிய காற்றாடியை எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி 9-ம் வகுப்பு மாணவர் பலியானார்.
திருவொற்றியூர்,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, சிவன் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சகுபர் அலி. இவருடைய மகன் அப்துல் வாசிம் (வயது 14). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மாணவர் அப்துல் வாசிம், தனது வீட்டின் மாடியில் இருந்து வானில் காற்றாடியை பறக்க விட்டார். திடீரென நூல் அறுந்துவிட்டதால் காற்றாடி, வீட்டின் பின்புறம் உள்ள ரெயில்வே யார்டில் மின்சார ரெயில்கள் செல்லும் உயர்அழுத்த மின் கம்பியில் சிக்கியது.

இதனால் அப்துல் வாசிம், அங்கு நிறுத்தி இருந்த ரெயில் பெட்டியின் மீது ஏறி உயர்அழுத்த மின் கம்பியில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் உடல் கருகிய அப்துல் வாசிம் தூக்கி வீசப்பட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், 60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாணவர் அப்துல் வாசிம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.