மாவட்ட செய்திகள்

குளமாக மாறிய சாலைகள் + "||" + Roads that have turned into pools

குளமாக மாறிய சாலைகள்

குளமாக மாறிய சாலைகள்
குளமாக மாறிய சாலைகள்
தூத்துக்குடி, நவ.26-
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.
கனமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் பல மணிநேரம் இடைவிடாது மழை கொட்டித்தீர்த்தது. தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இரண்டு நாள் இடைவெளிக்கு பின் நேற்று முன்தினம் 4 மணிக்கு தொடங்கிய மழை நேற்று வரை தொடர்ந்து கொட்டி தீர்த்தது. 
தென்திருப்பேரை ரோடுகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. ஆங்காங்கே வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. வாகனங்கள் சாலைகளில் தட்டுத்தடுமாறி சென்றன. அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. வயல் நிலங்களில் தண்ணீர் தேங்கியது.
உடன்குடி
உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளான கொட்டங்காடு, செட்டியாபத்து, தண்டுபத்து, மாதவன்குறிச்சி, பெரியபுரம், தாண்டவன்காடு, சிறுநாடார்குடியிருப்பு, மணப்பாடு, குலசேகரன்பட்டினம், கல்லாமொழி, பரமன்குறிச்சி, உதிரமாடன் குடியிருப்பு, பிறைகுடியிருப்பு, மெய்யூர், தாங்கையூர், கந்தபுரம், நேசபுரம், சீர்காட்சி, நயினார்பத்து, நயினார்புரம். வெள்ளாளன்விளை, சீயோன்நகர், மாநாடு, அத்தியடிதட்டு, செட்டிவிளை, வட்டன்விளை, வாத்தியார் குடியிருப்பு, வேப்பங்காடு, லட்சுமிபுரம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் நேற்று காலை 9.30 மணிமுதல் பகல் 11.30 வரையில் இடி மின்னலுடன் இடைவிடாமல்  கனமழை   பெய்தது.மதியம் 2 மணிக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் உடன்குடி பஜார் வீதிகள், பஸ் நிறுத்தங்கள், தெருக்களில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் ஆற்று தண்ணீர் போல மழை நீர் ஓடியது. சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காணப்பட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. பருவமழை காலம் தொடங்கிய பின்பு நேற்று தான் கனமழை பெய்ததாக பொதுமக்கள் கூறினார்கள்.
ஆறுமுகநேரி
புன்னக்காயல் பகுதியில் நேற்று காலையில் இருந்து பகல் 3 மணி வரை விடாது பெய்த மழையால் தெருக்களில் குளம் போல தண்ணீர் தேங்கியது.
ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் இடியுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 5 மணி நேரம் விடாது பெய்த இந்த மழையால் பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நேற்று அதிகாலையில் மழை மீண்டும் ஆரம்பித்தது. அந்த மழையானது சாரல் மழையில் இருந்து தொடங்கி காலை 9.30 மணியளவில் பலத்த மழையாக மாறியது. 2 மணி வரை மழை பெய்து கொண்டே இருந்தது. ஆறுமுகநேரியில் பல தெருக்களில் மழைநீர் குளம் போல தேங்கியது.
காயல்பட்டினம்
காயல்பட்டினத்தில் சின்னநெசவு தெரு, பெரிய நெசவுதெரு, கி.மு. கச்சேரிதெரு, அருணாசலபுரம் போன்ற பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. அருணாசலபுரத்தில் உள்ள தேசிய தொடக்கப்பள்ளியில் மழைநீர் குளம் போல தேங்கி கிடந்தது. கே.டி.எம். தெருவில் ரோட்டின் இருபுறமும் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து விட்டது. அதை மக்கள் அப்புறப்படுத்தினர். 
12 மணியளவில் காயல்பட்டினத்தில் 154 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆத்தூர்
இதேபோல் ஆத்தூரில் பலத்த மழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. வடக்கு ரதவீதி, பஞ்சாயத்து அலுவலகம், அதன் எதிரே உள்ள அரசு பள்ளிக்கூடம் ஆகியவற்றின் முன்பு தண்ணீர் குளம் போல் தேங்கியது. முதல் சந்திதெரு, குச்சிகள் காடு, முஸ்லிம் தெரு உள்ளிட்ட பல தெருக்களிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. புன்னக்காயல் பகுதியிலும் தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதுவரை இந்த ஆண்டில் பெய்த மழையில் தொடர்ந்து 5 முதல் 6 மணி நேரம் மழை பெய்தது இந்த ஆண்டு தான் என பொதுமக்கள் கூறினர்.
ஏரல்
மெஞ்ஞானபுரம், தட்டார்மடம், குலசேகரன்பட்டினம், நாசரேத், ஏரல், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலையில் பலத்த இடி மின்னலுடன் மழை பெய்தது. தொடர்ந்து மாலை வரையிலும் கனமழை விட்டு விட்டு பெய்தது.
இதனால் பெரும்பாலான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டனர். சாலைகள், தெருக்களிலும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காலை முதல் மாலை வரையிலும் பலத்த மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் மானாவாரி விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டியில் நேற்று காலையில் இருந்து வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. மதியம் 3 மணி அளவில் மழை கொட்டியது. ஒரு மணி நேரத்தில் 45 மி.மீ. மழை பெய்துள்ளது. அதற்குப் பிறகு விட்டு விட்டு லேசாகவும், மிதமாகவும் மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை நீரும், கழிவு நீரும் கலந்து ஓடியது.
இளையரசனேந்தல் ரோடு ெரயில்வே சுரங்க வழிப்பாதையில் மழைநீர் தேங்கி, குளம் போல் காட்சியளித்தது. இதில் கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் பாதியளவு மூழ்கிய நிலையில் சென்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது.
கோவில்பட்டி நகரில் மெயின் ரோடு, புதுரோடு, மாதாங் கோவில் ரோடு, பார்க் ரோடு பகுதிகளில் வாறுகால்களை தூர்வாரி, புதுப்பித்து, தரமான தார்ச்சாலை அல்லது சிமெண்டு காங்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வேன் மீட்பு
சாயர்புரம் வட்டார பகுதியில் நேற்று காலை 10 மணியிலிருந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. 
இதனால் இப்பகுதியில் உள்ள குளங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. சாயர்புரம் அருகே உள்ள முள்ளன்விளை ரேஷன் கடையை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது.
வண்ணன்ஓடையில் மினி வேன் சிக்கிக்கொண்டது. இதில் பயணம் செய்த 15 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். பின்பு பொதுமக்கள் அந்த வேனை மீட்டு கரைக்கு எடுத்து சென்றார்கள். ஓடையில் தண்ணீர் அதிக அளவில் ஓடுகிறது. தெருக்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சாத்தான்குளம்
சாத்தான்குளத்தில் நேற்று காலையிலிருந்து தொடர்ந்து இரவு வரை மழை பெய்து நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ரோடுகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பேரூராட்சி பகுதியில் கடந்த மாதம் 205.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சாத்தான்குளத்தில் 7-ந் தேதி 9.5 மில்லி மீட்டர் மழையும், 9-ந் தேதி 25 மில்லி மீட்டரும், 11-ந் தேதி 46.6, 18-ந் தேதி 14.4, 23-ந் தேதி 3.4, 24-ந் தேதி 13.4, 25-ந்தேதி 83 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.