மாவட்ட செய்திகள்

உள் வாடகைக்கு விடப்பட்ட 6 கடைகள் + "||" + 6 shops for internal rent

உள் வாடகைக்கு விடப்பட்ட 6 கடைகள்

உள் வாடகைக்கு விடப்பட்ட 6 கடைகள்
தஞ்சை புதிய பஸ் நிலைய முகப்பு பகுதியில் உள் வாடகைக்கு விடப்பட்ட 6 கடைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் கையகப்படுத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை புதிய பஸ் நிலைய முகப்பு பகுதியில் உள் வாடகைக்கு விடப்பட்ட 6 கடைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் கையகப்படுத்தினர்.
உள் வாடகைக்கு விடப்பட்ட கடைகள்
தஞ்சை புதிய பஸ் நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த கடைகள் பொது ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களில் பலர் தாங்களே நடத்தி வந்தாலும் சிலர் சட்ட விரோதமாக கூடுதல் தொகைக்கு உள் வாடகைக்கு விட்டுள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இது குறித்து மாநகராட்சி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன் ஆய்வு செய்தனர். அப்போது, புதிய பஸ் நிலைய முகப்பில் வலது புறமுள்ள 6 கடைகள் உள்வாடகைக்கு விடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இந்த கடைகளில் டாஸ்மாக்கடை, பார், டிபன் கடை, பெட்டிக்கடை போன்றவை செயல்பட்டு வந்தன. இந்த கடைகள் எல்லாம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குறைந்த பட்சமாக ரூ.4 ஆயிரத்து 990 வரையும், அதிகபட்சமாக ரூ.12 ஆயிரத்து 290 வரையும் வாடகைக்கு விடப்பட்டு இருந்தன.
ஐகோர்ட்டில் வழக்கு
ஆனால் ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்த கடைகளுக்கு உள் வாடகை மூலம் மாதம் ரூ.40 ஆயிரம் வரை சட்ட விரோதமாக வருவாய் ஈட்டி வந்தது கண்டறியப்பட்டது. உடனே இந்த 6 கடைகளையும் காலி செய்துவிட்டு மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அதன் உரிமையாளர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் கடைகளை காலி செய்யாத நிலையில் அந்த 6 கடைகளையும் கையகப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடை உரிமையாளர்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது மாநகராட்சி நிர்வாகத்துக்கு சாதகமாக இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ளது.
கையகப்படுத்தப்பட்டது
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த 6 கடைகளையும் கையகப்படுத்த முடிவு செய்தனர். அதன்படி மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், கண்காணிப்பாளர் கிளமெண்ட், வருவாய் அலுவலர் சங்கரவடிவேல் மற்றும் அலுவலர்கள் நேற்று புதிய பஸ் நிலைய முகப்பு பகுதிக்கு சென்றனர்.
பின்னர் அந்த பகுதியில் இருந்த 6 கடைகளையும் அடைக்க வலியுறுத்தினர். உடனே பெட்டிக்கடை, டாஸ்மாக் கடை, பார், டிபன் கடை எல்லாம் மூடப்பட்டன. பின்னர் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் அந்த 6 கடைகளையும் அதிகாரிகள் கையகப்படுத்தி தாங்கள் கொண்டு வந்த பூட்டுகளை போட்டு பூட்டினர். பின்னர், இந்த கடைகள் எல்லாம் மாநகராட்சி நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்ட விவரத்தை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது.
ஏலம் எடுத்தவர்களிடம் ஒப்படைக்கும் பணி
பின்னர் இந்த கடைகளை தற்போது நடைபெற்ற பொதுஏலத்தில் பங்கேற்று குறைந்தபட்சமாக ரூ.23 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.51 ஆயிரம் வரை வாடகைக்கு எடுத்தவர்களிடம் ஒப்படைக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.
இது குறித்து மாநகராட்சி வருவாய் அலுவலர் சங்கர வடிவேல் நிருபர்களிடம் கூறும்போது, இந்த 6 கடைகளும் உள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, மாநகராட்சியால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்கடைகளை பொறுப்பு எடுக்க வந்தபோது, தொடர்புடைய பழைய உரிமையாளர்களால் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் தற்போது கடைகளை கையகப்படுத்தியுள்ளோம் என்றார்.