விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை திட்டத்தை முறையான அனுமதி பெற்ற பிறகே செயல்படுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலை திட்டத்தை முறையான அனுமதி பெற்ற பிறகே செயல்படுத்த வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 8 Jan 2020 9:30 PM GMT (Updated: 8 Jan 2020 8:14 PM GMT)

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை திட்டத்தை முறையான அனுமதி பெற்ற பின்னரே செயல்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை, 

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. பொதுமக்களிடம் முறையாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமலும் இத்திட்டத்தை செயல்படுத்தி வருவதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே உள்ள வழித்தடத்தை விரிவாக்கம் செய்யாமல் 4 வழிச்சாலைக்காக புதிதாக வழித்தடம் அமைக்கப்பட்டு வருவதால் விவசாய நிலங்களும், வனப்பகுதிகளும், நீர்நிலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், “சுற்றுச்சூழல் துறை மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் இத்திட்டத்துக்கு முறையான அனுமதி பெறும் வரை இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. அதுவரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். இத்திட்டம் தொடர்பான அரசாணை ரத்து செய்யப்படவில்லை. முறையான அனுமதி பெற்று இத்திட்டத்தை செயல்படுத்தலாம். இதற்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் ஈடாக 10 மரங்களை நடவேண்டும். மரங்கள் முறையாக நடப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குழு ஒன்றையும் நெடுஞ்சாலைத்துறை அமைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Next Story