ராமநாதபுரத்தில் லாட்டரி விற்பனை; 4 பேர் கைது


ராமநாதபுரத்தில் லாட்டரி விற்பனை; 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2019 10:30 PM GMT (Updated: 10 Aug 2019 4:04 PM GMT)

ராமநாதபுரத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை ஆன்லைன் மூலம் பெற்று துண்டுசீட்டு லாட்டரிகளாக விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிகள் நம்பர் லாட்டரிகளாக ஆன்லைன்மூலம் வாங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்ப எந்திரங்கள் உதவியுடன் வெளிமாநில லாட்டரிகள் துண்டுசீட்டுகளாக பிரிண்ட் எடுத்து சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த லாட்டரிகளை ஏழை எளியவர்கள் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தனர். சொற்ப பணத்தினை மட்டும் பரிசாக கொடுத்து தினமும் ஏராளமான லாட்டரிகள் விற்பனை செய்து ஒரு கும்பல் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தது. இதுகுறித்து ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா லாட்டரி கும்பலை பிடிக்க தனிப்படையினருக்கு உத்தரவிட்டார்.

இதன்படி தனிப்படை போலீசார் நகரில் லாட்டரி விற்பனை செய்த கும்பல் குறித்து ரகசிய விசாரணை செய்தனர். ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் டீக்கடை மற்றும் இறைச்சி கடையில் வைத்து இந்த லாட்டரி விற்பனை நடைபெற்றது கண்டறியப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனை செய்த ராமநாதபுரம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகன்(வயது 50), செட்டிய தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் பாஸ்கரன்(50), கேணிக்கரை சாகுல்ஹமீது மகன் அப்துல்ரகீம்(60), பைசல்நகர் மாயழகன் மகன் சேகர்(50) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஆன்லைனில் பெறப்பட்ட தடைசெய்யப்பட்ட லாட்டரி துண்டு சீட்டுகள் மற்றும் விற்பனை பணம் ரூ.2,670 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிமாநிலங்களில் விற்பனையாகும் லாட்டரிகளின் நம்பர்களை ஆன்லைன் மூலம் பெற்று மாநில வாரியாக கலர் கலராக துண்டு சீட்டுகளில் பிரிண்ட் எடுத்து அதனை விற்பனை செய்து அதற்கான குலுக்கலை காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளில் நடத்தி பரிசுகளை வழங்கி உள்ளது. ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை பரிசு வழங்கும் வகையில் இந்த லாட்டரி விற்பனை நடைபெற்று வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த லாட்டரி விற்பனையின் மூளையாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த சூர்யா, மொத்த விற்பனையாளர் ராமநாதபுரம் இம்ரான்கான், சில்லரை விற்பனையாளர் பாஸ்கர் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். இவர்களில் சூர்யா பிடிபட்டால் இந்த லாட்டரியின் நெட்வொர்க் முழுவதையும் பிடித்து விடலாம் என்பதால் அதற்கான நடவடிக்கையில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனபாலன் வழக்குபதிவு செய்து 4 பேரையும் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story