விருதுநகரில் சுதந்திர தின விழா, கலெக்டர் சிவஞானம் தேசிய கொடி ஏற்றினார்


விருதுநகரில் சுதந்திர தின விழா, கலெக்டர் சிவஞானம் தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:30 PM GMT (Updated: 15 Aug 2019 10:23 PM GMT)

மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் சிவஞானம் தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதுடன் ரூ.44 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விருதுநகர்,

மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் 73-வது சுதந்திர தின விழா நடைபெற்றது. நேற்று காலை 9.05 மணிக்கு கலெக்டர் சிவஞானம் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதுடன் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் 127 பேருக்கு ரூ.44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். போலீஸ் துறையில் 62 பேருக்கும், நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர் கலைசெல்வி உள்பட சுகாதாரத்துறையை சேர்ந்த 30 பேருக்கும், தீயணைப்பு துறை சேர்ந்த 20 பேருக்கும் என மொத்தம் 223 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த கலெக்டர் சிவஞானத்தை மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், திட்ட இயக்குனர் சுரேஷ், உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் சுதாகர், முத்துக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து சாத்தூர் யூனியன் நல்லமுத்தன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டார். இதனையடுத்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விருதுநகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி லியாகத் அலி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நீதிமன்ற நடுவர்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் திரளாக கலந்து கொண்டனர். விருதுநகர் தேசபந்து திடலில் தியாகிகள் நினைவு தூணில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

விருதுநகர் பெரிய பள்ளிவாசலில் நிர்வாகிகள் செய்யது, கலில் ஆகியோரது தலைமையில் மவுலவி சேக்மைதீன் பாகவி தேசிய கொடி ஏற்றினார். இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் வக்கீல் சீனிவாசன் தலைமையில் நகர செயலாளர் காதர் முகைதீன் தேசிய கொடி ஏற்றினார்.

விருதுநகர் கே.வி.எஸ். பள்ளிகளில் பள்ளி செயலாளர் மதன் மோகன் தலைமையில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. கே.வி.எஸ். மேல்நிலை பள்ளி, நடுநிலை பள்ளி, திருவள்ளுவர் வித்யாசாலை, காமராஜர் வித்யாசாலை, சுப்பிரமணிய வித்யாசாலை, சரஸ்வதி வித்யாசாலை, கே.வி.எஸ். நூற்றாண்டு பள்ளி ஆகிய பள்ளிகளில் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்தனர். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விருதுநகர் அன்பு இல்லத்தில் நகர ஜேசிஸ் சங்கம் சார்பில் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. சங்க தலைவர் அண்ணாமலை தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது. நகர் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்களிலும் விழா கொண்டாடப்பட்டது.

Next Story