ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களுக்கு சம்பளம் உயர்வு


ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களுக்கு சம்பளம் உயர்வு
x
தினத்தந்தி 1 Feb 2018 11:00 PM GMT (Updated: 1 Feb 2018 8:22 PM GMT)

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களுக்கு 200 சதவீதம் சம்பளம் உயர்த்தப்படுகிறது. எம்.பி.க்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பளத்தை உயர்த்த சட்டம் இயற்றவும் பரிந்துரை செய்யப்பட்டது.

புதுடெல்லி,

நிதி மந்திரி அருண் ஜெட்லி பட்ஜெட் உரையின்போது இதுபற்றி அறிவித்ததாவது:-

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களின் சம்பளம் இறுதியாக 2006-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி மாற்றி அமைக்கப்பட்டது.

எனவே ஜனாதிபதியின் மாத சம்பளம் ரூ.5 லட்சம், துணை ஜனாதிபதி சம்பளம் ரூ.4 லட்சம், கவர்னர்களுக்கு ரூ.3.5 லட்சம் என மாற்றி அமைக்க பரிந்துரை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1.50 லட்சமாகவும், துணை ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1.25 லட்சமாகவும், கவர்னர்களின் சம்பளம் ரூ.1.10 லட்சமாகவும் உள்ளது. இது உயர் அதிகாரிகளின் சம்பளத்தைவிட குறைவு.

7-வது ஊதியக்குழு பரிந்துரை அமலாக்கத்துக்கு பின்னர் (2016-ம் ஆண்டு முதல்) உயர்ந்தபட்ச அதிகாரியான மத்திய அமைச்சக செயலாளர் ரூ.2.50 லட்சமும், மத்திய அரசு செயலாளர் ரூ.2.25 லட்சமும் சம்பளமாக பெறுகிறார்கள்.

ஜனாதிபதி முப்படைகளின் உயர் கமாண்டராகவும் உள்ளார். அதேசமயம் முப்படை தலைவர்களின் சம்பளத்தைவிடவும் ஜனாதிபதிக்கு சம்பளம் குறைவாகவே இருந்தது. அமைச்சக செயலாளருக்கு இணையாக முப்படை தளபதிகள் சம்பளம் பெறுகிறார்கள். எனவே ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களுக்கு சம்பளம் கணிசமாக உயர்த்தப்படுகிறது. இது சுமார் 200 சதவீத உயர்வு ஆகும்.

அதேபோல எம்.பி.க்கள் சம்பளம் குறித்தும் பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

இப்போது எம்.பி.க்கள் தங்கள் சம்பளத்தை அவர்களே நிர்ணயம் செய்கிறார்கள். இது விமர்சனத்துக்கு உள்ளாகிறது. எனவே எம்.பி.க்கள் சம்பளத்தை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தாமாக மாற்றி அமைக்க சட்டம் தேவை.

அதன்படி வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் எம்.பி.க்களின் சம்பளம், தொகுதி படி, அலுவலக செலவுகள், கூட்டத்துக்கான படி ஆகியவைகள் பணவீக்கம் அடிப்படையில் உயர்த்தப்படும். இதனை எம்.பி.க்கள் வரவேற்பார்கள் என கருதுகிறேன். இதன்மூலம் அவர்கள் விமர்சனத்தை தவிர்க்க முடியும் என்று அவர் கூறினார்.

தற்போது எம்.பி.க்கள் மாத சம்பளமாக ரூ.50 ஆயிரம், தொகுதி படியாக ரூ.45 ஆயிரம் மற்றும் இதர படிகள் பெறுகிறார்கள். அரசு ஒரு எம்.பி.க்கு மாதம் சுமார் ரூ.2.7 லட்சம் செலவிடுகிறது.

மத்திய மந்திரிகள், முன்னாள் பிரதமர்கள் ஆகியோரின் சம்பள செலவை கட்டுப்படுத்தும் வகையில் இதர படிகள் மற்றும் பயண செலவுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த பட்ஜெட்டில் இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.418.49 கோடியில் இருந்து குறைத்து இப்போது ரூ.295.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 29 சதவீதம் குறைவு.

பிரதமர் அலுவலக நிர்வாக செலவுகளுக்கு சற்றே நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.48.23 கோடி ஒதுக்கப்பட்டது. வெளிநாட்டு தலைவர்கள், மந்திரிகள், விருந்தினர்கள் வருகையின்போது வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ.5.22 கோடி ஒதுக்கப்படுகிறது.

Next Story