பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் நவீன ரெயில் பெட்டிகள்


பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் நவீன ரெயில் பெட்டிகள்
x
தினத்தந்தி 1 Feb 2018 11:30 PM GMT (Updated: 2 Feb 2018 4:21 AM GMT)

மாநிலங்களின் கலை, கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் புதிய ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். 2018-19-ம் நிதி ஆண்டில் இத்தகைய முதலாவது புதிய நவீன ரெயில் இயக்கப்படும் என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார். #Budget2018

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று பட்ஜெட் உரையில் ரெயில்வே குறித்து வெளியிட்ட அறிவிப்புகள். ரெயில்வே துறைக்கு அடுத்த நிதி ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1.31 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. அதைவிட இப்போது 13 சதவீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி பெரும்பாலும் ரெயில் நிலையங்கள் மற்றும் கட்டமைப்புகளின் திறனை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும். இதற்கு தடையாக இருக்கும் 5 ஆயிரம் கி.மீ. மீட்டர்கேஜ் ரெயில் பாதைகளை நீக்கி, அகல ரெயில் பாதைகளாக மாற்றுவது தொடர்ந்து நடைபெறும். 18 ஆயிரம் கிலோ மீட்டருக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படும்.

36 ஆயிரம் கிலோ மீட்டர் ரெயில் பாதைகள் புதுப்பிக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் அகல ரெயில் பாதைகளில் உள்ள 4,267 ஆளில்லாத ரெயில்வே கிராசிங்குகள் நீக்கப்படும். 600 முக்கிய ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அனைத்து ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் வைபை வசதி, கண்காணிப்பு கேமரா வசதி படிப்படியாக ஏற்படுத்தப்படும். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

சிக்னல்களை நவீனப்படுத்துவது, பனி மூட்டத்தில் இருந்து பாதுகாக்கும் கருவி, ரெயில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை கருவி, பயணிகளுக்கான சிறந்த வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

சரக்கு ரெயில் போக்குவரத்துக்கான புதிய பாதைகள் அமைக்கவும், மின்மயமாக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும். இந்திய ரெயில்வே இதர வருவாயை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராயும். வருகிற ஆண்டுகளில் 12 ஆயிரம் சரக்கு பெட்டிகள், 5,160 ரெயில் பெட்டிகள் மற்றும் சுமார் 700 ரெயில் என்ஜின்கள் கொள்முதல் செய்யப்படும்.

சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் மாநிலங்களின் கலைகளை பறைசாற்றும் வகையிலான அம்சங்களுடன் கூடிய நவீன ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்படும். இத்தகைய முதலாவது புதிய நவீன ரெயில் 2018-19-ம் நிதி ஆண்டில் இயக்கப்படும். குஜராத் மாநிலம் வதோதராவில் ரெயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

முதல் முறையாக நெருக்கம் மிகுந்த மும்பை ரெயில் போக்குவரத்து திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. ரூ.11 ஆயிரம் கோடியில் புதிதாக 90 கி.மீ. தூரத்துக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. அதோடு ரூ.40 ஆயிரம் கோடியில் மும்பை புறநகர் பகுதியில் 150 கி.மீ. தூரத்துக்கு ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் சில பகுதிகள் உயர்மட்ட ரெயில் பாதையும் அடங்கும்.

அதேபோல பெங்களூரு பெருநகர வளர்ச்சியை கவனத்தில் கொண்டு ரூ.17 ஆயிரம் கோடியில் 160 கி.மீ. தூரத்துக்கு புறநகர் ரெயில் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.

இந்த அறிவிப்பில் ரெயில் கட்டணம் பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை. அதேபோல பெரிய அளவிலான புதிய ரெயில்கள் பற்றிய அறிவிப்பும் இல்லை. பெரும்பாலும் விரிவாக்கம், நவீனமயம், பயணிகள் பாதுகாப்பு ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய பட்ஜெட்டில் விவசாய துறைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அது பற்றிய விவரங்கள்.

* விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு அதிக விலையை பெறுவதன்மூலம் தங்கள் வருமானத்தை அதிகரிக்கவும் அரசு விரும்புகிறது. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க பிரதமர் அறைகூவல் விடுத்துள்ளார்.

* விவசாய துறைக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. 2018-19-ம் நிதியாண்டுக்கான விவசாய பயிர்க்கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம்.

* 2016-17-ம் நிதியாண்டில் 275 மில்லியன் டன் உணவு தானியங்களும், 300 மில்லியன் டன் பழங்கள் மற்றும் காய்கறிகளும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.

* பயிர் உற்பத்தி சாதனை அளவை எட்டியுள்ள நிலையில், விளைபொருட்களுக்கான உற்பத்தி விலையை 50 சதவீதம் அதிகரிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. கரீப் பருவ விளைபொருட் களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 1½ மடங்கு அதிகரிக்கப்படும்.

* பொருட்களுக்கான விலையில் வீழ்ச்சி ஏற்பட்டால் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை பெறுவதை அரசு உறுதி செய்யும். இதற்காக மாநில அரசுகளுடன் நிதி ஆயோக் அமைப்பு கலந்து பேசி சிறந்த வழிமுறை உருவாக்கும்.

* ஊரக வேளாண் சந்தைகளை மேம்படுத்த ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.

* இயற்கை வேளாண் விவசாயிகள் மற்றும் மூலிகை விவசாயிகளை மிகப்பெரிய அளவில் அரசு ஊக்குவிக்கும். இயற்கை விவசாயத்தில் ஈடுபடுமாறு பெண் சுயஉதவிக்குழுக்கள் ஊக்குவிக்கப்படும்.

* இந்தியாவின் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி அளவை 30 பில்லியன் டாலரில் இருந்து 100 பில்லியன் டாலராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* விவசாயி-உற்பத்தியாளர் அமைப்புகள் (எப்.பி.ஓ.), வேளாண் தளவாடங்கள் மற்றும் பதப்படுத்துதல் போன்றவற்றை மேம்படுத்த (ஆபரேஷன் கிரீன்) ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.

* கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் தோட்டக்கலை சார்ந்த எப்.பி.ஓ.க்கள் ஊக்குவிக்கப்படும். இதில் சுய உதவிக்குழுக்களும் இணைய முடியும்.

* 42 மெகா உணவு பூங்காக்களில் சிறந்த வசதிகள் ஏற்படுத்தப்படும். உணவு பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1,400 கோடி ஒதுக்கீடு.

* கிசான் கடன் அட்டை வசதிகள் மீனவர்கள் மற்றும் கால்நடைத்துறைக்கும் விரிவுபடுத்தப்படும்.

* ரூ.1,290 கோடி செலவில் தேசிய மூங்கில் திட்டம் மறுசீரமைக்கப்படும். சூரிய ஒளி மின்சக்தி மூலம் பாசனம் செய்யும் மூங்கில் விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவர்.

* ரூ.100 கோடி வரை வர்த்தகம் செய்யும் விவசாய பொருள் நிறுவனங்களுக்கு 2018-19 முதல் 5 ஆண்டுகளுக்கு முழுவரிவிலக்கு வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் கல்விக்கு முன்னுரிமை, மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறை ஒதுக்கீடுகள் குறித்து கூறப்பட்டு இருந்ததாவது:-

வருகிற நிதியாண்டில் கல்வித்துறைக்காக ரூ.85,010 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் பள்ளிக்கல்விக்கு ரூ.50 ஆயிரம் கோடியும், உயர்கல்விக்கு ரூ.35,010 கோடியும் செலவிடப்படும். நர்சரி முதல் 12-ம் வகுப்பு வரை எந்தவித பிரிவினையும் இல்லாமல் முழுமையானதாக கல்வி கருதப்படும்.

கல்வித்துறையில் டிஜிட்டல் முறை அதிகரிக்கப்படும். அந்தவகையில் வகுப்பறைகளில் கரும்பலகையில் இருந்து டிஜிட்டல் பலகையாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கல்வித்தரத்தை மேம்படுத்த மாவட்ட வாரியான செயல்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டுக்காக ஒருங்கிணைந்த பி.எட். திட்டம் செயல்படுத்தப்படும். திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி மையங்கள் அமைக்க பரிந்துரைக்கப்படும்.

முன்னணி கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான கட்டமைப்புகளில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கான தேவை இருக்கும் நிலையில், இதற்காக ‘கல்வியில் உள்கட்டமைப்பு மற்றும் அமைப்புகளை புதுப்பித்தல் திட்டம்’ என்ற மிகப்பெரிய திட்டம் தொடங்கப்படும். இதன்படி அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும்.

பழங்குடி குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைக்க வசதியாக 50 சதவீதத்துக்கும் அதிகமான பழங்குடியினர் வசிக்கும் வட்டாரங்களில் நவோதயா பள்ளிகளுக்கு இணையான ஏகலைவா பள்ளிகள் 2022-ம் ஆண்டுக்குள் நிறுவப்படும்.

முழு வசதியுடன் கூடிய, திட்டம் மற்றும் கட்டிடக்கலை சார்ந்த 2 பள்ளிகள் அமைக்கப்படும். மேலும் ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.களிலும் இதுபோன்ற 18 பள்ளிகள் உருவாக்கப்படும். இவை தன்னாட்சி பள்ளிகளாக செயல்படும்.

மாவட்ட அளவிலான மருத்துவமனைகளை மேம்படுத்தி 24 புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அமைக்கப்படும். நிதி ஆயோக் சார்பில் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய திட்டம் உருவாக்கப்படும்.

சிறந்த 1000 பி.டெக் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஐ.ஐ.டி.கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பி.எச்.டி. ஆய்வுப்படிப்பு மேற்கொள்ள பிரதமரின் ஆய்வு நிதியுதவி வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

வருமான வரி செலுத்துகிற தனி நபர்களுக்கு இப்போது போக்குவரத்து அலவன்சு கழிவு, பலவகை மருத்துவ செலவின கழிவு அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஆண்டுக்கு போக்குவரத்து அலவன்சு ரூ.19 ஆயிரத்து 200, பல வகை மருத்துவ செலவின மீட்புத்தொகை ரூ.15 ஆயிரம் கழிவாக அனுமதிக்கப்படுகிறது.

இவ்விரண்டையும் ஒழித்துக்கட்டி விட்டு, புதிதாக நிலையான கழிவு என ரூ.40 ஆயிரம் அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கழிவு பெறுவதற்கு எந்த ஆதார ஆவணமும் (பில்கள்) இணைக்க வேண்டியது இல்லை.

இதனால் தனிநபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 800 வரிக்கழிவு கூடுதலாக கிடைக்கிறது. இந்த கழிவின் காரணமாக பயனாளிகள் ரூ.302 முதல் ரூ.2,081 வரை வரி சேமிக்க முடியும்.

இந்த சலுகைகள் மாதச் சம்பளதாரர்களுக்கு மட்டுமல்லாது ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். அதேநேரத்தில் மருத்துவ இனம் சார்ந்த செலவை திரும்பப்பெறும் நடைமுறை தொடரும். மாற்று திறனாளிகளுக்கு போக்குவரத்துபடி உயர்த்தப்பட்ட அளவில் தொடர்ந்து வழங்கப்படும்.

மத்திய பட்ஜெட்டில் ராணுவ துறைக்கான ஒதுக்கீடுகள் குறித்து அருண் ஜெட்லி கூறியதாவது:- 2018-19-ம் நிதியாண்டில் ராணுவத்துக்கு ரூ.2.95 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை (ரூ.2.74 லட்சம் கோடி) விட அதிகம் ஆகும். இதில் ரூ.1.96 லட்சம் கோடி வருவாய் (நிகர) செலவினத்துக்கும், ரூ.99 ஆயிரம் கோடி மூலதன செலவினத்துக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு தொழில்துறை சார்ந்த ராணுவ உற்பத்தி கொள்கையை அரசு செயல்படுத்தும். மேலும் நாட்டில் 2 ராணுவ தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். அன்னிய நேரடி முதலீட்டை தாராளமயமாக்கியது உள்பட ராணுவ உற்பத்தியில் தனியார் முதலீட்டுக்கான வாய்ப்புகளை நாங்கள் ஏற்படுத்தி உள்ளோம்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தது முதல் ராணுவ துறையின் திறன் அதிகரித்தல் மற்றும் நவீனப்படுத்துதலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு துறையை முன்னேற்றவும், பாதுகாப்பு தேவைகளை நிறைவேற்றுவதில் சுயசார்பு நாடாக மாற்றவும் கடந்த 3½ ஆண்டுகளில் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

பொதுத்துறையை சேர்ந்த நேஷனல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், யுனைடெட் இந்தியா அஷ்யுரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஓரியண்டல் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகிய பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை இணைத்து ஒரே காப்பீட்டு நிறுவனமாக ஆக்கப்படும் என்றும், அது பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து விட்டதாகவும் அருண் ஜெட்லி கூறினார். 2 காப்பீட்டு நிறுவனங்கள் உள்பட 14 பொதுத்துறை நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதை காண பார்வையாளர்களாக அவருடைய மனைவி சங்கீதா ஜெட்லி, மகன் ரோகன் ஜெட்லி, அருண் ஜெட்லியின் சகோதரி மது பார்கவா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் சங்கீதா ஜெட்லி கூறுகையில், என்னுடைய கணவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளிப்பேன். இதில் சில மனித தவறுகள் நடந்திருப்பதால் 10-க்கு 10 மதிப்பெண் அளிக்கவில்லை என்றார். பட்ஜெட்டை காங்கிரஸ் குறை கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களின் வேலையே குற்றங்களை கண்டுபிடிப்பது தான் என்றார்.

மத்திய பட்ஜெட்டுக்கு மது பார்கவா 10-க்கு 10 மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த பட்ஜெட் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார். ரோகன் ஜெட்லி கூறுகையில், இது எதிர்காலத்துக்கான சிறந்த பட்ஜெட் என தெரிவித்தார்.

புதிதாக வேலைக்கு சேருகிற பெண்களுக்கு இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாவில் சலுகை, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பணியில் சேர்ந்த முதல் 3 ஆண்டுகளுக்கு இவர்கள் 10 அல்லது 12 சதவீதத்துக்கு பதிலாக 8 சதவீத சந்தா தொகையை (அடிப்படை சம்பளத்தில்) செலுத்தினால் போதுமானது.

இதன் மூலம் அவர்கள் பிடித்தங்கள் போக வீட்டுக்கு எடுத்துச்செல்கிற சம்பள அளவு அதிகமாக இருக்கும். அதே போன்று, இவர்களுக்கு தொழில் நிறுவன அதிபர்கள் செலுத்த வேண்டிய 12 சதவீத சந்தாவில் மாற்றம் இல்லை. இதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டம் திருத்தம் செய்யப்படுகிறது.

மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து அவர் மாநிலங்களவையிலும் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதனையடுத்து நாடாளுமன்றம் வருகிற திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘பா.ஜ.க. எம்.பி. சிந்தராமன் வங்கா கடந்த மாதம் 30-ந் தேதி காலமானார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இறந்தால் அவையை ஒத்திவைப்பது மரபு. ஆனால் இது ஜனாதிபதி கூட்டிய கூட்டத்தொடர் என்பதாலும், பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஜனநாயக கடமையை கருத்தில் கொண்டும் இன்று (நேற்று) பாராளுமன்ற கூட்டம் நடந்தது’ என்று தெரிவித்தார். இதேபோல் மாநிலங்களவையும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story