டி.வி.நடிகை நந்தினி கணவர் தற்கொலைக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்


டி.வி.நடிகை நந்தினி கணவர் தற்கொலைக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 5 April 2017 5:35 AM GMT (Updated: 5 April 2017 5:35 AM GMT)

டி.வி. தொடர்களில் நடித்து பிரபலமானவர் நந்தினி. ‘வம்சம்’ படத்தில் அறிமுகமான இவர் பல படங்களில் நடித்தார். தொடர்ந்து டி.வி. தொடர் களில் நடித்து வருகிறார்.


சென்னை, வளசரவாக்கம், எஸ்.வி.எஸ் நகர், மெயின்ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தி. இவரது மகன் கார்த்திக். இவர், தி.நகரில் ஜிம் நடத்தி வந்தார். இந்த ஜிம்மிற்கு சின்னத்திரை நடிகை 'மைனா' நந்தினி வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் காதல் மலர்ந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக சொல்கின்றனர். இதனால் மனம் உடைந்த கார்த்தி, ஜிம்மை வேறுநபருக்கு விற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற கார்த்திக், விருகம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் தங்கியுள்ளார். அவரைத் தேடிய சாந்தி, விருகம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார், விசாரணை நடத்தியதில் கார்த்திக், விருகம்பாக்கத்தில் உள்ள லாட்ஜில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்குச் சென்ற போது கார்த்திக் தங்கியிருந்த அறையின் கதவு உள்பக்கம் மூடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போலீஸார், பாத்ரூமில் கார்த்திக் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவரது உடலை மீட்ட போலீஸார், அங்கு விசாரணை நடத்தியபோது குளிர்பானத்தில் விஷம் குடித்து அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. அதோடு அந்த அறையில் தற்கொலைக்கு முன்பு கார்த்திக் எழுதிய கடிதமும் போலீஸிடம் சிக்கியது. அந்தக்கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு நந்தினியின் தந்தையே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
 
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கார்த்திக் அம்மா சாந்தி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் நந்தினியை ஆசை, ஆசையாக கார்த்திக் காதலித்துள்ளார். ஆனால், திருமணம் முடிந்த தொடக்கத்திலேயே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.

கார்த்திக்குக்கு ஏற்கெனவே வெண்ணிலா என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்தது. அந்தப்பழக்கத்தை கார்த்திக், நந்தினியிடம் மறைத்துள்ளார். நந்தினி, கார்த்திக் திருமணம் நடந்த தகவலையறிந்த வெண்ணிலா, தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய தற்கொலைக் கடிதத்தில் கார்த்திக் பெயரை குறிப்பிட்டதால் போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

இதனால் நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினர் மனவேதனை அடைந்தனர். இதுவே, நந்தினி, கார்த்திக் இடையே கருத்துவேறுபாட்டுக்கு முக்கியகாரணமாக இருந்தது. இதைத்தவிர வேலைவாங்கி தருவதாகவும் கூறி கார்த்திக் சிலரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனால், நந்தினி, கார்த்திக்கைப் பிரிந்து தன்னுடைய அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். தொடர்ந்து கார்த்திக்குக்கு சோதனைக்கு மேல் சோதனை ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதற்கிடையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய சாகச நிகழ்ச்சியில் கார்த்திக்கும், நந்தினியும் பங்கேற்றனர். அப்போது, கார்த்திக்குக்கு காலில் அடிப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முன்புகூட கார்த்திக் தன்னுடைய அம்மா சாந்தியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

 சிகிச்சைக்குப்பிறகு வீட்டுக்குத் திரும்பாமல் லாட்ஜுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்கு வராததால் சாந்தி, கார்த்திக்கின் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அவர் பதிலளிக்காததால் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதன்பிறகே கார்த்திக் தற்கொலை செய்த விவரம் தெரியவந்தது.

கார்த்திக் எழுதிய கடிதத்தில் நந்தினியின் தந்தை உள்பட இன்னும் சிலரது பெயர்களை சூசகமாகச் சொல்லியுள்ளார். இதுதொடர்பாக கார்த்திக் அம்மா புகார் கொடுத்தால் நந்தினி உள்பட அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்படும்" என்றார்.

இறக்கும் போது கார்த்திகேயன் எழுதி வைத்துள்ள கடிதத்தில் தனது தற்கொலைக்கு காரணம் நந்தினியின் தந்தை தான் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் தனது சகோதரி ரம்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘அம்மாவை நீ பார்த்துக்கொள். இத்தனை நாள் பிணமாக வாழ்ந்தேன். இனிமேல் வாழ பிடிக்கவில்லை . என் கவுரவம், மரியாதை போய்விட்டது. என் இறுதி ஆசை, முதல் மனைவி வெண்ணிலாவை புதைத்த இடத்தின் அருகே என்னை புதைத்துவிடு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

போலீசுக்கு  கார்த்திக் எழுதி இருக்கும் கடிதத்தில் ‘என் மரணத்துக்கு காரணம் என் மாமனார் ராஜேந்திரன் தான் காரணம். அவர் பணத்துக்காக என்னையும் என் மனைவியையும் பிரித்து விட்டார். நான் மனைவியுடன் பேச முயற்சி செய்தேன். ஆனால் என்னை அவர் தடுத்து விட்டார். இதனால் நான் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்.

என் மாமனாரிடம் எவ்வளவோ பேசியும் அவர் என் பேச்சை கேட்கவில்லை. எங்கள் இருவரிடமும் கருத்து வேறுபாடு ஏற்பட வைத்து என்னை பயங்கர மன உளைச்சல் அடைய செய்துவிட்டார்.நான் சாக முழுகாரணம் என் மாமனார் ராஜேந்திரன் தான்’ என்று கார்த்திக் கூறியுள்ளார்.

மனைவி நந்தினிக்கும் கார்த்திகேயன் ஒரு கடிதம் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

கணவர் கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டது குறித்து நந்தினி கூறியதாவது:-

நானும் கார்த்தி கேயனுக்கும் ஒருவருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவர் என்னைவிட, என் பணத்தை தான் அதிகம் விரும்பினார். திருமணத்துக்கு பிறகு தான் அது எனக்கு தெரிந்தது. என்னுடைய நகைகளை அவருடைய வீட்டார் வாங்கி வைத்துக்கொண்டனர்.

அவருக்கு இன்னொரு பெண்ணுடனும் தொடர்பு இருந்திருக்கிறது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். அந்த வழக்கில் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். இந்த விஷயத்தை எனது குடும்பத்தினரிடம் கூட சொல்லவில்லை. இது மட்டுமல்ல அவர், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.80 லட்சம் வரை மோசடி செய்து இருப்பதும் எனக்கு தெரிய வந்தது.

இது தொடர்பாக அவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பணம் கொடுத்தவர்கள் அந்த பணத்தை திரும்ப தரும்படி வற்புறுத்தினார்கள். இதனால் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து எனது பெற்றோர் என்னை அவர்களுடைய வீட்டுக்கே அழைத்து சென்று விட்டனர்.

என்றாலும், கார்த்திகேயனை மனதில் காதலித்துக் கொண்டுதான் இருந்தேன். அவரை விட்டுப்பிரிய மனம் இல்லை. இந்த பணப் பிரச்சினையை தீர்த்துவிட்டு வந்தால் நாம் சேர்ந்து வாழ லாம் என்று சொன்னேன். அம்மா வீட்டில் இருந்தாலும் அடிக்கடி அவரை சந்தித்து வந்தேன்.

பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி தருவதாகவும், தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருப்பதாகவும், மனம் நொந்த நிலையில் என்னிடம் கூறினார். அவருக்கு ஆறுதல் கூறினேன்.

அவ்வப்போது  செல வுக்கு பணம் கொடுத்து வந்தேன். இந்த நிலையில்தான் திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இப்படி செய்வார் என்று நினைக்க வில்லை.இவ்வாறு நந்தினி கூறினார். கார்த்திகேயன் தற் கொலை குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

Next Story