‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்


‘துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
x
தினத்தந்தி 6 Jan 2018 7:30 PM GMT (Updated: 2018-01-06T23:04:33+05:30)

துப்புரவு பணிதான் இருப்பதிலேயே மிகவும் கடினமானது என்று நடிகர் சசிக்குமார் தெரிவித்தார்.

திண்டுக்கல்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுகாதார பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தில் பொதுமக்களை பங்குபெற வைக்கும் வகையில், ஒவ்வொரு மாநகராட்சியிலும் பிரபலமான நபர்கள் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாநகராட்சிக்கு நடிகரும், இயக்குனருமான சசிக்குமார் தூய்மை இந்தியா திட்ட தூதுவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையொட்டி, தூய்மை தூதுவர் அறிமுக விழா திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் உள்ள தனியார் மகாலில் நடந்தது. இந்த விழாவுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக மாநகராட்சி கமி‌ஷனர் மனோகர் அனைவரையும் வரவேற்றார். நகர்நல அலுவலர் அனிதா தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதியில் செய்யப்பட்டு வரும் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

விழாவில், தூய்மை தூதுவரான நடிகர் சசிக்குமார் பேசும்போது கூறியதாவது:–

திண்டுக்கல் மாநகராட்சியின் தூய்மை தூதுவர் நான் மட்டும் கிடையாது. மக்கள் அனைவருமே தூய்மை தூதுவர்கள் தான். நகரை சுகாதாரமாக வைத்து கொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பை எதுவென்று குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லி கொடுக்க வேண்டும். அதனை தனித்தனியாக பிரித்து துப்புரவு தொழிலாளர்களிடம் வழங்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பெற்றோர் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். எனது சொந்த ஊர் மதுரை என்றாலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தான் பள்ளி படிப்பை முடித்தேன். இதனால், திண்டுக்கல்லுக்கு வந்தது சந்தோ‌ஷமாக உள்ளது. துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால், இருப்பதிலேயே மிகவும் கடினமான பணி துப்புரவு பணிதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story