நடிகர் சங்க அறங்காவலர் பதவி நடிகர் எஸ்.வி.சேகர் ராஜினாமா


நடிகர் சங்க அறங்காவலர் பதவி நடிகர் எஸ்.வி.சேகர் ராஜினாமா
x
தினத்தந்தி 8 Jan 2018 7:30 PM GMT (Updated: 2018-01-08T23:54:16+05:30)

எனக்களிக்கப்பட்ட அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

சென்னை, 

நடிகர் சங்க தலைவர் நாசருக்கு, நடிகர் எஸ்.வி.சேகர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

‘‘என்னை நடிகர் சங்க அறங்காவலர்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய அறிவுரை, ஆலோசனைகள், வழி நடத்துதல் தேவை என கேட்டுக்கொண்டீர்கள். ஆனால் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்தபோது நான் பல மெயில்கள் அனுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள்.

என் பதில் கடிதத்தில் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக நம் நடிகர் சங்கம் 5 கிரவுண்டு அளவில் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ரோட்டை ஆக்கிரமித்துள்ளதாக வந்த புகரைப்பற்றி கேட்டபோது கூட அப்படி ஒன்றுமே இல்லையென்று விஷாலும், கார்த்தியும் சொன்னார்கள். எதிர் தரப்பினர் உச்ச நீதிமன்றம் செல்வதாக அறிகிறேன்.

மலேசிய கலை விழாவிலும் பல குளறுபடிகள். பல கலைஞர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள் என தெரிந்து கொண்டேன். என் மனசாட்சிக்கு எதிராக நம் சங்கத்தின் சார்பில் நடக்கும் தவறுகளுக்கு நான் உடன்பட முடியாது என்பதாலும், அறங்காவலர் என்ற பதவி நடிகர் சங்கத்தை பொறுத்தவரையில் ஒரு அலங்காரப்பதவியாக கருதப்படுவதாலும், எனக்களிக்கப்பட்ட அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.


Next Story