பத்மாவத் படம் வெளியானால் ஜனங்களே அதனை நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும்: கர்னி சேனா


பத்மாவத் படம் வெளியானால் ஜனங்களே அதனை நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும்:  கர்னி சேனா
x
தினத்தந்தி 23 Jan 2018 11:38 AM GMT (Updated: 23 Jan 2018 11:38 AM GMT)

பத்மாவத் படம் வெளியானால் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் பொதுமக்களே எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜந்தா போராட்டம் நடத்தப்படும் என கர்னி சேனா அமைப்பு கூறியுள்ளது. #Padmaavat

ஜெய்பூர்,

இந்தி திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் சர்ச்சைக்குள்ளான பத்மாவத் படம் வருகிற ஜனவரி 25ந்தேதி வெளிவருகிறது.  இந்த படத்தில் இடம்பெறும் சில காட்சிகளுக்கு ராஜ்புத் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.  இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர்கள் மனு செய்திருந்தனர்.  இதில், நாடு முழுவதும் பத்மாவத் திரைப்படம் வெளியாவதற்கு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச அரசுகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இதற்கு தடை கேட்டு கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  முன்பு பிறப்பித்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.  இதனால் படம் வெளியாவதில் இருந்த தடை நீங்கியது.

இந்த நிலையில், வருகிற ஜனவரி 25ந்தேதி பத்மாவத் படம் வெளியானால் நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் ஜந்தா போராட்டம் நடத்தப்படும் என ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த அமைப்பின் தலைவர் லோகேந்திரா சிங் கல்வி கூறும்பொழுது, நாங்கள் பொதுமக்களிடம் நேரிடையாக செல்வோம்.  படம் வெளியானால், நாடு முழுவதும் திரையரங்குகளில் ஜந்தா போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

தொடர்ந்து அவர், ஜந்தா போராட்டம் என்றால், படம் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களே அதனை நிறுத்தி விடுவார்கள் என கூறியுள்ளார்.

திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எங்களுக்கு ஆதரவு தரும்படி நாங்கள் கேட்டுள்ளோம்.  நான் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று படத்திற்கு எதிராக முதல் மந்திரிகளிடம் ஆதரவு கேட்டுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

திரைப்படத்தினை எதிர்த்து வரும் இந்த அமைப்பு, படத்தின் உரிமையை பெற வேண்டாம் என விநியோகஸ்தர்களை கேட்டு கொண்டுள்ளது.

#Padmaavat #Jaipur #KarniSena


Next Story