உலக பாக்ஸ் ஆபீஸ் : ரஜினியின் தர்பார் 150 கோடி ரூபாய் வசூலித்து சாதனை...!


உலக பாக்ஸ் ஆபீஸ் : ரஜினியின் தர்பார்  150 கோடி ரூபாய் வசூலித்து  சாதனை...!
x
தினத்தந்தி 14 Jan 2020 3:51 AM GMT (Updated: 2020-01-15T05:52:47+05:30)

150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் கடந்த 9-ந்தேதி வெளியானது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களிலும் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களிலும் திரையிடப்பட்டன. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

முதல் 4 நாட்களுக்கு அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. அரசு அனுமதி கிடைத்ததால் அதிகாலையிலேயே சிறப்பு காட்சிகளையும் திரையிட்டனர். தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. படம் திரைக்கு வந்த சில மணி நேரத்திலேயே முழு படமும் இணைய தளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர வைத்தது.

அதோடு கேபிள் டி.வி.யிலும் ஒளிபரப்பு செய்தனர். வாட்ஸ் அப்பிலும் பரவியது. இதனால் வசூல் பாதிக்கும் என்ற அச்சம் நிலவியது. இந்த தடைகளையும் மீறி தர்பார் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்களில் உலக அளவில் தர்பார் படம் ரூ.150 கோடி வசூலித்து உள்ளதாக லைகா பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

நேற்று மற்றும் நேற்று முன்தினம் ஆகிய 2 நாட்களும் சேர்த்து மொத்தம் ரூ.180 கோடி வசூல் ஈட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாரம் இறுதியில் வசூல் ரூ.200 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story