நிர்பயா குற்றவாளிகளுடன் ஜெய்சிங்கை 4 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும்; நடிகை கங்கனா ரணாவத் ஆவேசம்


நிர்பயா குற்றவாளிகளுடன் ஜெய்சிங்கை 4 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும்; நடிகை கங்கனா ரணாவத் ஆவேசம்
x
தினத்தந்தி 23 Jan 2020 6:00 AM GMT (Updated: 2020-01-23T12:08:04+05:30)

நிர்பயா குற்றவாளிகளுடன் இந்திரா ஜெய்சிங்கை 4 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என நடிகை கங்கனா ரணாவத் பேட்டியில் ஆவேசமுடன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற மருத்துவ மாணவியை கற்பழித்து கொடூர முறையில் தாக்கி வெளியே வீசினர்.  இதன்பின் சிங்கப்பூரில் மேல் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.  இதனை அடுத்து மருத்துவ மாணவி கற்பழித்து, கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை கோர்ட்டு விதித்த இந்த  தண்டனையை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.

குற்றவாளிகள் 4 பேரையும் 22ந்தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்கில் போட வேண்டும் என விசாரணை கோர்ட்டு கடந்த 7ந்தேதி மரண வாரண்டு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இதற்கிடையே தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் ஜனாதிபதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கருணை மனு அனுப்பினார். இதனால் தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்குமாறு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தண்டனை நிறைவேற்றத்துக்கான அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் திகார் சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்குமாறு டெல்லி அரசும், துணைநிலை கவர்னரும் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தனர். இந்த கருணை மனுவை பரிசீலித்த உள்துறை அமைச்சகமும் இதை நிராகரிக்க வேண்டும் என பரிந்துரைத்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது.

கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததும், தண்டனையை பிப்ரவரி 1-ல் நிறைவேற்றுவதற்கான புதிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, தமக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், ராஜீவ் கொலையாளிகளை சோனியா காந்தி மன்னித்தது போல் நிர்பயா குற்றவாளிகளை அவரது தாய் ஆஷா தேவி மன்னிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதுகுறித்து நிர்பயாவின் தாய் ஆஷாதேவி கூறுகையில், எனக்கு ஆலோசனை அளிக்க இந்திரா ஜெய்சிங் யார்? குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என நாடே விரும்புகிறது.

இந்திரா போன்றவர்களால்தான் பாலியல் குற்றவாளிகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. இது போன்ற ஆலோசனையை எனக்கு கொடுக்க இந்திராவுக்கு தைரியம் எப்படி வந்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

நான் அவரை சுப்ரீம் கோர்ட்டில் பல முறை சந்தித்துள்ளேன். ஆனால் அவர் எனது நலன் குறித்து ஒரு முறை கூட கேட்டதே இல்லை. ஆனால் இன்று குற்றவாளிகளுக்காக பரிந்து பேசுகிறார்.

இவர் போன்ற ஆட்கள் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள். எனவே பாலியல் பலாத்காரங்கள் ஒரு போதும் தடுத்து நிறுத்தப்படாது என்றார்.

இதனிடையே, இந்தி திரைப்பட நடிகை கங்கனா ரணாவத் தனது நடிப்பில் வெளியாகவுள்ள பங்கா படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.  அதில் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், நிர்பயா வழக்கின் பாலியல் பலாத்கார குற்றவாளிகளுடன் அந்த பெண்ணை (இந்திரா ஜெய்சிங்) 4 நாட்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட வேண்டும்.

அவருக்கு அது தேவை.  பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டோருக்கு இரக்கம் காட்டும் இதுபோன்ற பெண்கள் எத்தகைய தன்மையுடையவர்கள்? இவரை போன்ற பெண்கள் அரக்கர்களை பெற்றெடுக்கின்றனர்.  பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மற்றும் கொலைகாரர்களுக்கு முழு அளவில் அன்பு மற்றும் இரக்கம் காட்டும் இதுபோன்ற பெண்களே அவர்களை பெற்றெடுக்கின்றனர் என்று ஆவேசமுடன் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறும்பொழுது, இந்த பாலியல் பலாத்கார குற்றவாளிகள் அமைதியான முறையில் தூக்கிலிடப்பட வேண்டும் என நான் நினைக்கவில்லை.  நீங்கள் எடுத்துக்காட்டாக ஒன்றை செயல்படுத்த முடியவில்லை எனில் உச்சபட்ச தண்டனை என்பதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது?  அவர்கள் பொதுவெளியில் அனைவரின் முன்பும் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் ரணாவத் கூறியுள்ளார்.

Next Story