இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து: கமல்ஹாசன்,ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு


இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து:  கமல்ஹாசன்,ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு
x
தினத்தந்தி 21 Feb 2020 8:56 AM GMT (Updated: 21 Feb 2020 8:56 AM GMT)

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் ல் தயாரிக்கும் இந்தப் படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈபிவி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில்  ராட்சத கிரேன் திடீரென சரிந்து படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் மீது விழுந்தது.இந்த விபத்தில் சங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா, படப்பிடிப்பு தளத்தில் உணவு தயாரிப்புக் குழு உதவியாளராக பணியாற்றி வந்த மது, உணவுப்பொருள் விநியோக மேலாளராக இருந்த சந்திரன் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்துக்கு காரணமான கிரேன் ஆபரேட்டரை போலீசார் தேடி வரும் நிலையில், படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து நடைபெற்றபோது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப, வழக்கை விசாரித்து வரும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story