பிரதமர் மோடியின் ஊரடங்கு அறிவிப்பினை மக்கள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும்; நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தல்


பிரதமர் மோடியின் ஊரடங்கு அறிவிப்பினை மக்கள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும்; நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 March 2020 11:45 AM GMT (Updated: 21 March 2020 11:45 AM GMT)

பிரதமர் மோடியின் ஊரடங்கு அறிவிப்பினை மக்கள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

உலக நாடுகள் முழுவதும் அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் ஆட்கொண்டுள்ளது.  இதுவரை 298 பேருக்கு நாட்டில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதனை அடுத்து வைரஸ் பரவலை தடுக்க மற்றும் கட்டுப்படுத்துவதற்காக, பிரதமர் மோடி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.  அவரது இந்த அறிவிப்பினை மக்கள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நாடு முழுவதும் நாளை நடத்தப்படும் ஊரடங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் மிக சிக்கலான 3ம் நிலை கொரோனா வைரஸ் சமூக பரவலை தவிர்க்க நாடு தயாராகி வருகிறது.

இந்த வைரசை தடுக்க இதேபோன்ற தேசிய ஊரடங்கை அமல்படுத்த இத்தாலி அரசு முயற்சி செய்தது.  ஆனால், குடிமக்களிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை.  இதனால் அரசின் முயற்சிகள் தோல்வி அடைந்தன.

இதன் தொடர்ச்சியாக தொற்றுநோய்க்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி விட்டனர்.  இதேபோன்ற நெருக்கடியான நிலை இந்தியாவிலும் ஏற்பட வேண்டாம்.  அதனால், ஒவ்வொருவரும் இந்த ஊரடங்கு அறிவிப்பினை ஏற்று கொண்டு, வீட்டிலேயே இருப்பது மற்றும் சமூக தொடர்பில் இருந்து தொலைவில் இருப்பது ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.

இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் சுயநலமற்ற முறையில் பணியாற்றும், அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஆகியோரை நினைவுகூர்வதுடன் நன்றி செலுத்த வேண்டும்.  நாளை மாலை 5 மணியளவில் நடைபெறும் இறைவணக்கத்திலும் பங்கு பெற வேண்டும்.  நன்றிகள் என அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story