ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பாலிவுட்டில் பயப்படுகிறார்கள்... அது நமக்கு பெருமைதான் - நடிகர் பார்த்திபன்


ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பாலிவுட்டில் பயப்படுகிறார்கள்... அது நமக்கு பெருமைதான் - நடிகர் பார்த்திபன்
x
தினத்தந்தி 27 July 2020 8:38 AM GMT (Updated: 2020-07-27T14:08:10+05:30)

ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு பாலிவுட்டில் பயப்படுகிறார்கள்... அது நமக்கு பெருமைதான் என நடிகர் பார்த்திபன் கூறி உள்ளார்.

சென்னை

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான கடைசிப் படமான 'தில் பெச்சாரா', ஜூலை 24-ம் தேதி ஓடிடி தளத்தில் இலவசமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

'தில் பெச்சாரா' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், "நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால், என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்" என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தக் கருத்து தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு, திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பார்த்திபன், “கலைக்கு மொழியில்லை என்று நாம் எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதை நாம் எந்த அளவுக்கு பின்பற்றுகிறோம் என்று தெரியவில்லை. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் டுவிட்டர் பதிவைப் பார்க்கும் போது அவருக்கே இப்படி ஒரு நிலையா என்று மிகவும் வருத்தமாக இருந்தது. அவர் தென்னிந்திய மற்றும் பாலிவுட் அளவில் மட்டும் வெற்றிபெற்றவர் அல்ல. அவர் ஆஸ்கர் வின்னர்.

வின்னர் படத்தில் வடிவேலு, ரியாஸ்கானைப் பார்த்து பயப்படுவது போல் நகைச்சுவைக் காட்சி இடம்பெற்றிருக்கும். அந்தப் பயம் தெரியாமல் இருக்க, பேச்சு பேச்சாதான் இருக்கனும், இந்தக் கோட்டைத் தாண்டி நானும் வர மாட்டேன். நீயும் வரக்கூடாது என்று வடிவேலு வசனம் பேசுவார். அந்த மாதிரி பாலிவுட்டில் இருக்கக் கூடியவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசைமேல் ஒரு பயம். இது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மட்டுமல்ல. இளையராஜா தமிழகத்தில் இந்திப் பாடல்கள் மேலோங்கி நின்ற போது அதை உடைத்து, தமிழ்ப் பாடல்களை கோலோச்ச செய்தவர்.

அந்த மாதிரி ஏ.ஆர்.ரஹ்மான் வருகைக்கு பின்னர் பாலிவுட் அடி வாங்கியது. அவரது வருகை பாலிவுட்டுக்கு பெரும் பாதிப்பு. அதனால் பழுத்த மரத்தில் தான் கல்லடி படும் என்பது போல எப்போதுமே இந்த எதிர்ப்பு இருந்திருக்கிறது என்று தான் எனக்கு தோன்றுகிறது.

இதுவரை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தெரியாமல் மறைமுகமாக இருந்திருக்கலாம். இப்போது யாரோ ஒருவர் மூலமாக அவருக்கு தெரிந்திருக்கிறது. அதை நினைத்து நாம் பெருமைதான் பட வேண்டுமே தவிர வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் எனக்கு தோன்றுகிறது. கமல்ஹாசனையும் பாலிவுட் வரவிடாமல் தடுத்தார்கள். இந்த எதிர்ப்பை நாம் எப்படி கடந்து போகிறோம் என்பது தான் யோசிக்க வேண்டியது. நம்மைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றாலே அது நமக்கு பெருமைதான். அதை நாம் தக்கவைத்துக் கொள்ளலாம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இன்னும் பிரமாதமான படங்கள் கொடுக்கும் போது பயத்தைத் தாண்டி வர்த்தக ரீதியிலாவது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்போர்கள். அப்போது இந்த நிலைமை மாறி சரியாப் போகும் என்று நினைக்கிறேன்”என்று கூறினார்.

Next Story