இந்தியன் 2 படப்பிடிப்பில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு


இந்தியன் 2 படப்பிடிப்பில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு
x
தினத்தந்தி 6 Aug 2020 1:04 PM GMT (Updated: 2020-08-06T18:34:08+05:30)

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் இழப்பீடு வழங்கியுள்ளனர்.

சென்னை,

லைகா நிறுவனம் தயாரிப்பில் சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்திற்காக சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19ந்தேதி செட் அமைக்கும் பணிகள் நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விபத்து ஏற்பட்டதில் உதவி இயக்குனர் மது, சங்கரின் இணை இயக்குனர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குனர் சந்திரன் ஆகிய 3 பேர் பலியானார்கள். மேலும் 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.  தொடர்ந்து, 3 பேரின் உடல்களுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்தியன் - 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து என் குடும்பத்தில் நிகழ்ந்ததாக கருதுகிறேன். 
இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த கிருஷ்ணா இன்று உயிருடன் இல்லை.

நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். 4 நொடிகளுக்கு முன்புவரை நான் அங்குதான் இருந்தேன். இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என கூறினார்.

இந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கல், இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்வோம் என இயக்குநர் சங்கர் கூறியுள்ளார்.

படப்பிடிப்பு விபத்து கசப்பான பாடம், சட்டதிட்டங்களின்படி நடப்போம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Next Story