ஜெய்பீம் படத்திற்கு விருது தர கூடாது - மத்திய, மாநில அரசுகளுக்கு வன்னியர் சங்கம் கடிதம்


ஜெய்பீம் படத்திற்கு விருது தர கூடாது - மத்திய, மாநில அரசுகளுக்கு வன்னியர் சங்கம் கடிதம்
x
தினத்தந்தி 18 Nov 2021 12:55 PM GMT (Updated: 18 Nov 2021 12:55 PM GMT)

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்திற்கு விருது தரவே கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு வன்னியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.



சென்னை,

நடிகர் சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது. உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த படத்தில்  மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்த படத்தை பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.  ஜெய்பீம் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.  இந்திய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சூர்யாவுக்கு பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.

திரை பிரபலங்கள் பலரும் ஜெய்பீம் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.  நடிகர் சூரி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம்ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.  படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் #ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் படத்திற்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தவர்களுக்கு நடிகர் சூர்யா நன்றியை தெரிவித்துள்ளார்.

இணையத்தில் ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி பல்வேறு மொழி படங்களின் விமர்சனங்கள் இடம்பெறும் தளம் ஐ.எம்.டி.பி. இது உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இணையதளம் ஆகும்.

இந்த இணையதளத்தில் அதிக புள்ளிகளை பெற்ற படமாக 'தி ஷஷாங் ரிடம்ஷன்' இடம்பெற்றது.  இந்த பட்டியலில் '3 இடியட்ஸ்', 'தாரே ஜமீன் பர்', 'லகான்', 'தங்கல்', 'அந்தாதூன்' உள்ளிட்ட பாலிவுட் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. முதல் 250 படங்கள் பட்டியலில் எந்தவொரு தமிழ் படமும் இடம்பெறாமல் இருந்தது.

இந்த நிலையில், தற்போது முதன் முறையாக ஐஎம்டிபி பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது 'ஜெய்பீம்' திரைப்படம்.  9.6 புள்ளி ரேட்டிங்குடன் முதல் இடம் பிடித்திருக்கிறது. 'தி ஷஷாங் ரிடம்ஷன்' திரைப்படம் 9.3 புள்ளி ரேட்டிங்குடன் 2ம் இடத்தில் உள்ளது. தி காட்பாதர் திரைப்படம் 9.2 புள்ளி ரேட்டிங்குடன் 3வது இடத்தில் உள்ளது.

எனினும், இந்த படத்திற்கு பா.ம.க. தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களிலும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டன. அதேவேளையில், சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜெய்பீம் படத்தில் வன்னியர் சங்கத்தை இழிவுப்படுத்தும் விதமாக இருப்பதாக கூறி அதன் தலைவர் அருள்மொழி தனது வழக்கறிஞர் பாலு சார்பில் நடிகர் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

அதில் வன்னியர் சங்கத்தின் புனித குறியீடான அக்னி குண்டத்தையும் காடுவெட்டி குருவை தவறாக சித்தரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸ் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

ஜெய்பீம் படத்தால் வன்னியர் சங்கமும், ஒட்டுமொத்த வன்னியர்களும் மனதளவில் புண்பட்டுள்ளனர் என்பதால் ஒரு வாரத்திற்குள் ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டது. இதற்கு பாமக மற்றும் வன்னியர் சங்கம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. #பணம்பறிக்கும்பாமக என்ற ஹேஸ்டேக்கையும் டிரெண்ட் செய்தனர்.

இச்சூழலில் தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை செயலர், தமிழ்நாடு தகவல் மற்றும் பொதுவிவகார துறை செயலர் ஆகியோருக்கு வன்னியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

அதில், அக்னி குண்டம் என்பது வன்னியர்களின் புனித சின்னமாக பல நூற்றாண்டுகளாக உள்ளது. இதேபோல் குரு என்பது வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவரின் பெயர். ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி குண்டம் மற்றும் குருவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக வன்னியர் சங்கம் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரவுள்ளது. எனவே, ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டவோ, அங்கீகரிக்கவோ தேசிய விருது போன்ற விருது வழங்கவோ கூடாது என கோரிக்கை வைக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story