புஷ்பா... முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம்
நடப்பு ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா எட்டிப்பிடித்து உள்ளது.
சென்னை,
தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான படம் புஷ்பா. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பகத் பாசில் ஐ.பி.எஸ். அதிகாரியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், சுனில், தனஞ்ஜெயா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. அண்மையில் புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனை அடுத்து, புஷ்பா படம் கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 17ந்தேதி வெளியானது.
இப்படம் வெளியாவதற்கு முன்பே சாட்டிலைட், திரையரங்கு, ஆடியோ மற்றும் டிஜிட்டல் உரிமை விற்பனை மூலம் ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இதுதவிர இப்படத்தின் அனைத்து மொழிகளுக்குமான டிஜிட்டல் உரிமையை பிரபல ஓ.டி.டி. தளம் ஒன்று பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், இந்த படம் வசூலில் புதிய சாதனை படைத்து உள்ளது. படம் வெளியான முதல் நாளில் ரூ.71 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது. இந்த படம், நடப்பு ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.
Related Tags :
Next Story