சினிமாவில் 15 வருடங்கள் நிறைவு - கார்த்தி நெகிழ்ச்சி பதிவு..!
சினிமாவிற்கு வந்து 15 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் இயக்குனர் அமீர் இயக்கிய 'பருத்தி வீரன்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
கார்த்தியினுடைய சினிமா பயணத்திற்கு பருத்தி வீரன் திரைப்படம் முக்கியமான ஒன்றாக அமைந்தது. அடுத்தடுத்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று என்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
பருத்தி வீரன் கடந்த 2007 ம் ஆண்டு பிப்ரவரி 23-ந்தேதி வெளியானது. இன்றுடன் பருத்தி வீரன் திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து நடிகர் கார்த்தி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய 15 வருட திரைப்பயணம் குறித்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர், 'என்னுடைய நடிப்பு பயணத்தை பருத்தி வீரன் திரைப்படம் மூலம் தொடங்கியதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவுகளும் அமீரால் கற்பிக்கப்பட்டது, வடிவமைக்கப்பட்டது. எல்லாப் புகழும் அவருக்கே உரியது.
அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பல பாடங்களில், செய்யும் வேலையில் மூழ்கி மகிழ்ச்சியுடன் செய்வதற்கு அவர் எனக்குக் கற்றுக் கொடுத்த விதத்தை நான் இன்னும் பொக்கிஷமாக கருதுகிறேன். இந்த வழியில் செல்வதற்கு என்னை தூண்டிய அமீர், ஞானவேல், அண்ணா, என்னுடைய ரசிகர்கள் மற்றும் மீடியா அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
A big thank you!
— Actor Karthi (@Karthi_Offl) February 23, 2022
15 Golden Years since #Paruthiveeran! pic.twitter.com/FNzinrzZTG
Related Tags :
Next Story