தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு் ஜூன் 23-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு உத்தரவுப்படி வாக்கு எண்ணிக்கை நடத்தாமல் வங்கி லாக்கரில் வாக்குப்பெட்டிகள் பத்திரமாக வைக்கப்பட்டன.
இதற்கிடையே நடிகர் சங்க தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் தேர்தல் செல்லாது என்று தீர்ப்பு அளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த மாதம் (பிப்ரவரி) 23-ந் தேதி விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்பு செல்லாது என்றும், நடிகர் சங்க தேர்தல் செல்லும் என்றும் தீர்ப்பு அளித்தனர். மேலும் வாக்கு எண்ணிக்கை நடத்தவும் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து நடிகர் ஏழுமலை என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் (பிப்ரவரி) 23-ந் தேதி கூறிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை நடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே பதிவான வாக்குகளை எண்ணவும், தேர்தல் முடிவுகளை அறிவிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அந்த விசாரணையில், ‘தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019-ல் நடந்த தேர்தல் செல்லும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக நடிகர் ஏழுமலை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தடையில்லை என்றும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் இந்த வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நடிகர் சங்க தேர்தலில் கே. பாக்கியராஜ் தலைமையிலான அணியும், நாசம் தலைமையிலான அணியும் போட்டியிட்டன.
தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் சுமார் 2 ஆயிரத்து 500 வாக்குகள் பதிவாகின. அதில் 1,150 வாக்குகள் தபால் மூலம் பதிவாகின.
நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர்.
மற்றொரு தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
நடிகர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story