5 நட்சத்திர ஓட்டலில் போதை விருந்து பிரபல தமிழ்பட நடிகை உள்பட பிரபலங்கள் சிக்கினர்


Image courtesy: deccanchronicle.com
x
Image courtesy: deccanchronicle.com
தினத்தந்தி 4 April 2022 1:14 PM IST (Updated: 4 April 2022 2:01 PM IST)
t-max-icont-min-icon

5 நட்சத்திர ஓட்டலில் போதை விருந்தில் கலந்து கொண்ட பிரபல தமிழ்பட நடிகை உள்பட பிரபலங்கள் சிக்கினர்.

ஹைதராபாத்

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் தனியார் 5 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் போதை விருந்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முதலில் அந்த ஓட்டலின் இமெயிலுக்கு தகவல் அனுப்ப வேண்டும். ஓட்டல் தரப்பிலிருந்து அனுப்பப்படும் ஓ.டி.பி மூலம் எந்த மேஜை ஒதுக்கப்பட்டுள்ளது என அவர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவார்கள். அந்த எஸ்.எம்.எஸ்-ஐ காட்டினால் மட்டுமே செக்யூரிட்டிகள் ஓட்டலுக்குள் அனுமதிப்பார்கள்

இந்த ஓட்டலில் நள்ளிரவு ஒரு மணி வரை மது விருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை ஓட்டலில் போதை விருந்து நடைபெறுவதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் ஜோயல் டேவிஷ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார்  ஓட்டலுக்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கு போதை விருந்தில் கலந்து கொண்ட 148 பேரை சுற்றி வளைத்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆந்திரா மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தம்பி நாக பாபுவின் மகள் நிகாரிகா, திரைப்பட பாடகர் ராகுல், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சவுத்ரி மகள், ஆந்திரா முன்னாள் டி.ஜி.பி மகள் மற்றும் முன்னாள் எம்.பியின் மகன் என விஐபியின் பிள்ளைகள் கலந்து கொண்டது தெரியவந்தது.

இவர்களுக்கு அந்த ஓட்டலில் பிரவுன் சுகர், கொகைன் உள்ளிட்ட போதைப் பொருள் சப்ளை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதற்காக 5 பாக்கெட்டுகளில் வைத்திருந்த 12 கிராம் எடையுள்ள கொகைன் பறிமுதல் செய்தனர். 

நிகாரிகாவிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார்  பின்னர் அவரை விடுவித்தனர். விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்கின் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தில் நிகாரிகா நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிகாரிகாவின் தந்தை வெளியிட்டுள்ள விடியோவில் என் மகள் அந்த விடுதியில் இருந்தது உண்மை. ஆனால் அவர் எந்த தவறும் செய்யவில்லை. இதனால் வதந்திகளை நம்பாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். 



Next Story