5 கிராமி விருதுகளை வென்று அசத்திய ஜான் பேட்டிஸ்ட்..!


5 கிராமி விருதுகளை வென்று அசத்திய ஜான் பேட்டிஸ்ட்..!
x
தினத்தந்தி 4 April 2022 2:49 PM IST (Updated: 4 April 2022 2:49 PM IST)
t-max-icont-min-icon

இந்த விருது உண்மையான கலைஞர்கள் அனைவருக்கும் கிடைத்த விருது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

லாஸ் வேகாஸ்,

இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது. 

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் டிரெவர் நோவா தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் ஏராளமான இசை கலைஞர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்திய சினிமா உலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் தனது மகன் ஏ.ஆர்.அமீனுடன் கலந்து கொண்டார். 

இந்த விழாவில், பிரபல பாடகர் மற்றும் பாடலாசிரியரான ஜான் பேட்டிஸ்ட், 5 கிராமி விருதுகளை வென்று அசத்தினார். அவருடைய பெயர் 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

“வீ ஆர்...” என்ற ஆல்பம் பாடலுக்காக அவர் விருதை தட்டி சென்றார். 14 வருடங்களுக்கு பின் ஒரு கறுப்பினத்தவர்  ஆல்பம் பாடல் பிரிவில் கிராமி விருதை வெல்வது இதுவே ஆகும்.

அவருடைய  “கிரை..” என்ற பாடல் 2 பிரிவுகளில் கிராமி விருதுகளையும்,  “ப்ரீடம்..” என்ற பாடல் சிறந்த மியூசிக் வீடியோவிற்காகவும் கிராமி விருதை வென்றது.  “சோல்..” படத்தில் அவருடைய பங்களிப்பிற்காக 1 கிராமி விருதும் கிடைத்தது. முன்னதாக அந்த படத்திற்காக அவர் ஆஸ்கர் விருதும் சமீபத்தில் வென்றிருந்தார். 



விருது வழங்கும் மேடையில் ஜான் பேட்டிஸ்ட் பேசியதாவது;-

“மக்களுக்கு தேவைப்படும் போது அவர்களுடைய வாழ்வின் சில சந்தர்ப்பங்களில் இத்தகைய படைப்பு கலைகள் அவர்களை போய் சேரும். 

இந்த உலகில் சிறந்த இசைக்கலைஞன், சிறந்த நடிகர், சிறந்த நடன கலைஞன் என்று யாரும் கிடையாது. இதை நான் ஆழ்மனதிலிருந்து நம்புகிறேன். 

கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் சிறு பையனாக இருக்கும்போதே இசையமைத்து வருகிறேன்.

நான் தலைவணங்கி என்னுடைய பணியை ஒவ்வொரு நாளும் செய்து வருகிறேன். நான் இசையை காதலிக்கிறேன். எனக்கு இசை மிகவும் பிடிக்கும்.

இசை என்பது பொழுதுபோக்கையும் தாண்டி, ஒரு ஆன்மீக பயிற்சி ஆகும். 

இந்த விருது பெற பரிந்துரை செய்யப்பட்ட ஒவ்வொரு கலைஞனையும் எனக்கு பிடிக்கும்.உங்கள் ஒவ்வொருவருடைய இசையுடனும் எனக்கு அனுபவம் உள்ளது. உங்கள் அனைவரையும் மதிக்கிறேன்.

இந்த விருது உண்மையான கலைஞர்கள் அனைவருக்கும் கிடைத்த விருது.நாம் பயணித்துக்கொண்டே இருப்போம். நீங்கள் நீங்களாகவே இருங்கள்.”

இவ்வாறு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 



அதற்கு முன்பாக அவர்  ‘ப்ரீடம்..’ பாடலை மேடையில் பாடி பார்வையாளர்கள் அனைவரையும் குதூகலப்படுத்தினார்.

Next Story