மலையாள திரையுலகில் இன்னொரு பாலியல் புகார்! பிரபல நடிகரால் ஒன்றரை மாதங்களாக நடிகைக்கு பாலியல் வன்கொடுமை


மலையாள திரையுலகில் இன்னொரு பாலியல் புகார்! பிரபல நடிகரால் ஒன்றரை மாதங்களாக நடிகைக்கு பாலியல் வன்கொடுமை
x
தினத்தந்தி 27 April 2022 5:32 PM IST (Updated: 27 April 2022 6:10 PM IST)
t-max-icont-min-icon

அவரது வலையில் பல பெண்களும் சிக்கியுள்ளனர்.அவர் என்னுடைய நிர்வாண வீடியோவை பதிவு செய்து, அதனை காண்பித்து மிரட்டியுள்ளார்.

திருவனந்தபுரம்,

நடிகை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக மலையாள தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் பாபுவின் புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரித்த படங்களில் நடித்த பெண் நடிகை ஒருவர், ஏப்ரல் 22ஆம் தேதி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கடந்த ஒன்றரை மாதங்களாக தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபுவால்  தான் உடல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் சுரண்டல்களை அனுபவித்ததாக அந்த பெண் விவரித்தார்.

மேலும், இது குறித்து பேஸ்புக் பதிவின் மூலம் அந்த பெண் விவரித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“எனது தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு, என்னை காப்பாற்றுபவராக, எனது மீட்பராக விஜய் பாபு நடந்து கொண்டார். ஆனால் நல்லவர் என்ற போர்வையில், பின்னர் அவர் என்னை பாலியல் ரீதியாக சுரண்டினார்.

கற்பழிப்பு மற்றும் உடல் ரீதியான தாக்குதல் தவிர, விஜய் பாபு மது மற்றும் 'மகிழ்ச்சி மாத்திரை' என்ற போதைப்பொருளையும் உட்கொள்ளும்படி என்னை கட்டாயப்படுத்தினார்.

திரையுலகில் அவரது செல்வாக்கு காரணமாக, மற்றவர்களிடம் நான் அனுபவித்த பாலியல் சுரண்டல் பற்றி விவாதிப்பதில் எனக்கு பயம் இருந்து வந்தது.  

விஜய் பாபுவின் வலையில் மேலும் பல பெண்களும் சிக்கியுள்ளனர் என்று அறிந்தேன். அவர் என்னுடைய நிர்வாண வீடியோவை பதிவு செய்து, அதனை காண்பித்து மிரட்டியுள்ளார்.”

இவ்வாறு அந்த நடிகை தெரிவித்தார்.

இந்த நிலையில், போலீசிடம் விஜய் பாபு  மீதான பலாத்காரக் குற்றச்சாட்டை அந்த நடிகை புகார் அளித்ததை தொடர்ந்து,  விஜய் பாபுவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது.



இதற்கிடையே, விஜய் பாபு நேற்று திடீரென பேஸ்புக் நேரலை அமர்வு மூலம் உரையாடினர். அப்போது அவர், பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை பொதுவெளியில் அம்பலப்படுத்தினார்.

மேலும், வேண்டுமென்றே அந்த நடிகையின் பெயர் உள்ளிட்ட அடையாளத்தை வெளியிட்டதாகவும் விஜய் பாபு  கூறினார். தான் குற்றமற்றவன் என்று கூறிய விஜய் பாபு, உண்மையான பலி ஆடு நான் தான் என்று கூறினார்.
அவர் தன் மீதான  குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். 

ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக, அந்த பெண் நடிகையை தனக்கு தெரியும் என்று ஒப்புக்கொண்டார்.மேலும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய நடிகைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தயாரிப்பாளர் விஜய் பாபு பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து, கேரள போலீஸ்  தரப்பில் கூறுகையில், “விஜய் பாபு  பாதிக்கப்பட்ட அந்த நடிகையின் பெயர் மற்றும் அடையாளத்தை வெளிப்படுத்தினார், இது ஒரு குற்றமாகும், இதனால், மேலும் அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் இப்போது தலைமறைவாக இருப்பதாகவும் தெரிகிறது” என்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரபல தமிழ், மலையாள நடிகை பாலியல் வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம், கேரள ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து மலையாள திரையுலகில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பெண்கள் சினிமா கலெக்டிவ்(டபிள்யு.சி.சி) சங்கம், பாதிக்கப்பட்ட நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தி, இந்த தேசத்தின் நீதித்துறையை கேலி செய்யும் விதமாக நடிகர் விஜய் பாபு நடந்துள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது.

மலையாளத் திரையுலகம் இந்தச் செயல்களைக் கண்டிக்கும் என்றும், குற்றவாளிகளை ஒதுக்கி வைத்து பெண்களுக்கான பணியிடத்தைச் சுத்தப்படுத்தும் என்றும் நம்புவதாக தெரிவித்துள்ளது.

Next Story