இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ஜூலை 10ல் தேர்வு; சவுரவ் கங்குலி


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ஜூலை 10ல் தேர்வு; சவுரவ் கங்குலி
x
தினத்தந்தி 1 July 2017 4:37 PM GMT (Updated: 2017-07-01T22:08:45+05:30)

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் வருகிற 10ந்தேதி தேர்வு செய்யப்படுவார் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான அனில் கும்பிளேவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பதவிக்கு பலர் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்பிளே விலகியதை தொடர்ந்து 2வது முறையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 9 ஆகும்.  இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி இந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.  இதேபோன்று வீரேந்தர் சேவாக், டாம் மூடி, லால்சந்த் ராஜ்புத், ரிச்சர்டு பைபஸ் மற்றும் தோடா கணேஷ் ஆகியோரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள லார்ட்சில் உலக கிரிக்கெட் குழு கூட்டம் வருகிற 3 மற்றும் 4ந்தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலி செல்கிறார்.

அதற்கு முன் வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய பயிற்சியாளருக்கான நேர்காணல் வருகிற 10ந்தேதி மும்பையில் நடைபெறும் என கூறினார்.

இநதிய கிரிக்கெட் ஆலோசனை குழுவின் உறுப்பினர்களாக சவுரவ் கங்குலி, சச்சின் தெண்டுல்கர் மற்றும் வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோர் உள்ளனர்.

Next Story