எங்களுடன் கிரிக்கெட் விளையாட இந்தியா அஞ்சுகிறது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்


எங்களுடன் கிரிக்கெட் விளையாட இந்தியா அஞ்சுகிறது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்
x
தினத்தந்தி 6 July 2017 10:26 AM GMT (Updated: 6 July 2017 10:26 AM GMT)

எங்களுடன் கிரிக்கெட் விளையாட இந்தியா அஞ்சுகிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லமாபாத்,

கடந்த ஜூன் 18 ஆம் தேதி  நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப்போட்டியில், 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி கண்டது. இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் நேற்று  பாராட்டு விழா நடத்தினார். இஸ்லமாபாத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகார்யர் கான்  இந்திய அணிக்கு சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். சகார்யர் கான் கூறியதாவது:- “ நாங்கள் வெற்றி அடைந்த பிறகு,  இங்கு வந்து எங்களுடன் இரு தரப்பு தொடரில் விளையாடுமாறு இந்தியாவுக்கு  நாங்கள் சவால் விடுத்தோம். ஆனால் இந்திய அணி  விளையாட முன்வரவில்லை. எங்களை கண்டு இந்திய அணி அச்சப்படுகிறது. இதன்காரணமாகவே, நாங்கள் ஐசிசியால் நடத்தப்படும் தொடர்களில் மட்டுமே உங்களுக்கு (பாகிஸ்தானுக்கு) எதிராக விளையாடுவோம் என்று தெரிவித்துவிட்டனர். இரு தரப்பு தொடரில் விளையாட முடியாது என்று தெரிவித்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அணி இரு தரப்பு தொடரில் பங்கேற்கவில்லை. இதனால் பாகிஸ்தான் அணிக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  2015-2023  ஆம் ஆண்டுகளில் 5 இரு தரப்பு தொடரில் விளையாட வேண்டும் என்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தை  இந்திய கிரிக்கெட் வாரியம் மீறிவிட்டதாகவும் இதன்காரணமாக 60 மில்லியன் டாலர் (தோராயமாக 387 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு லீகல் நோட்டிசும் விடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story