சாம்பியன் அணியாக இருந்தால், ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாதா என்ன? மிதாலி ராஜ் கேள்வி


சாம்பியன் அணியாக இருந்தால், ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாதா என்ன? மிதாலி ராஜ் கேள்வி
x
தினத்தந்தி 20 July 2017 5:07 AM GMT (Updated: 2017-07-20T10:37:41+05:30)

ஆஸ்திரேலிய அணி சாம்பியன் அணியாக இருந்தால், வீழ்த்த முடியாதா என்ன என்று மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

8 அணிகள் இடையிலான 11–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் முறையே முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.

முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 2–வது அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஆஸ்திரேலிய அணி 7 லீக் ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. அந்த அணி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் நல்ல நிலையில் உள்ளது.

இந்திய அணி 7 ஆட்டங்களில் 5–ல் வெற்றியும், 2 ஆட்டங்களில் தோல்வியும் கண்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 115 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்தது.

வாழ்வா–சாவா? சூழ்நிலையில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் மிதாலிராஜ் சதம் அடித்தார். மன்பிரீத் கவுர் 60 ரன்னும், வேதா கிருஷ்ணமூர்த்தி 70 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணியை 79 ரன்னில் இந்தியா சுருட்டியது. ராஜேஸ்வரி கெய்க்வாட் 5 விக்கெட்டும், தீப்தி ‌ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார்கள். இந்த மைதானம் இந்திய அணிக்கு ராசியான மைதானம் எனலாம். ஏனெனில் இங்கு நடந்த 4 லீக் ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆடுகளத்தின் சாதகத்தை பயன்படுத்தி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி முயற்சிக்கும். ஆனால் அது எளிதான காரியம் கிடையாது. ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்றால் இந்திய அணி எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். முதல் இரண்டு ஆட்டங்களில் ஜொலித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் மந்தனா நல்ல நிலைக்கு திரும்ப வேண்டியது முக்கியமானதாகும்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் 42 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 34 முறையும், இந்திய அணி 8 தடவையும் வெற்றி பெற்றுள்ளன. உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் 11 முறை மல்லுக்கட்டி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி 9 முறையும், இந்திய அணி 2 தடவையும் வெற்றி கண்டுள்ளன. உலக கோப்பை போட்டியில் 9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் ஆஸ்திரேலிய அணி 6 முறை கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது. 2005–ம் ஆண்டில் மட்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, 98 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டு கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டது. எனவே இரு அணிகளையும் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கி இருக்கிறது.

இத்தொடர் குறித்து இந்திய அணியின் தலைவர் மிதாலி ராஜ் கூறுகையில், அரையிறுதி போட்டி நடக்கவுள்ள டெர்பி மைதானத்தில், அதிக லீக் ஆட்டங்கள் விளையாடியுள்ளோம்.

இதனால் தங்களுக்கு போதிய அனுபவம் உள்ளது. ஆஸ்திரேலியா அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, இருப்பினும் முயற்சி செய்வோம்.

சாம்பியன் அணியாக இருந்தால் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த முடியாதா என்ன? தோல்விக்கு அந்தணி மட்டும் விதிவிலக்கு அல்ல என்று கூறியுள்ளார்.

Next Story