இங்கிலாந்து தொடருக்கு தயராகும் வகையில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விராட் கோலி முடிவு


இங்கிலாந்து தொடருக்கு தயராகும் வகையில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விராட் கோலி முடிவு
x
தினத்தந்தி 24 March 2018 5:45 AM GMT (Updated: 24 March 2018 5:45 AM GMT)

இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முடிவு செய்துள்ளார். #ViratKohli

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி வரும்  ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டுக்கு எதிராக 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், மற்றும்  5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளார். 

11-வது ஐபிஎல் தொடர் முடிந்ததும், இங்கிலாந்து கவுண்டி போட்டியில் விளையாடுவதற்காக விராட் கோலி, இங்கிலாந்து செல்ல உள்ளார் என்று பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார். ஆனால், கவுண்டி போட்டியில் எந்த உள்ளூர் அணிக்காக விளையாட உள்ளார் என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. அநேகமாக சர்ரே அல்லது எஸ்ஸெக்ஸ் அணிக்காக விராட் கோலி விளையாடக்கூடும் என தெரிகிறது. 

கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்தது. அந்த தொடர் விராட் கோலிக்கு மிக மோசமான அனுபவமாக அமைந்தது. டெஸ்ட் தொடர் முழுவதிலும் ஒரு அரைசதம் கூட விராட் கோலியால் அடிக்க முடியவில்லை. இதனால், விராட் கோலி கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராடு ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விராட் கோலி மிகவும் திணறினார். குறிப்பாக ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை எதிர்கொள்வதில் அவர் மிகவும் சிரமம் கொண்டார். ஆகவே, வரும் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு பழக்கப்படவும் முன்கூட்டியே இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட விராட் கோலி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

விராட் கோலியை தவிர புஜாரா, இஷாந்த் சர்மா ஆகியோரும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர். மேலும் சில மூத்த வீரர்களும் இந்திய ஏ அணியில் இடம் பெற்று இங்கிலாந்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

Next Story