ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி - டோனி, ஜாதவ் அரைசதம் அடித்தனர்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி - டோனி, ஜாதவ் அரைசதம் அடித்தனர்
x
தினத்தந்தி 2 March 2019 4:06 PM GMT (Updated: 2 March 2019 8:27 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டோனி, ஜாதவ் அரைசதம் அடித்தனர்.

ஐதராபாத்,

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில் குல்தீப் யாதவுடன் 2-வது சுழற்பந்து வீச்சாளராக ரவீந்திர ஜடேஜா இடம் பிடித்ததால் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை. லோகேஷ் ராகுல், ரிஷாப் பான்டும் சேர்க்கப்படவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி பிஞ்சும், உஸ்மான் கவாஜாவும் ஆஸ்திரேலிய அணியின் இன்னிங்சை தொடங்கினர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமியும், ஜஸ்பிரித் பும்ராவும் தாக்குதலை தொடுத்தனர். ‘பார்ம்’ இன்றி தடுமாறும் ஆரோன் பிஞ்ச் இந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. ரன் கணக்கை தொடங்கும் முன்பே அவர் பும்ராவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். இது பிஞ்சின் 100-வது ஒரு நாள் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து கவாஜாவுடன் மார்கஸ் ஸ்டோனிஸ் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கத்தில் நிதானம் காட்டினர். முதல் 7 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதில் முகமது ஷமி 2 மெய்டன் ஓவர் வீசியதும் அடங்கும்.

தங்களை நிலை நிறுத்திக்கொண்ட பிறகு இருவரும் சற்று வேகம் காட்டினர். குல்தீப் யாதவின் பந்து வீச்சில் கவாஜா ஒரு சிக்சரை பறக்கவிட்டார். ஸ்கோர் 87 ரன்களாக (20.1 ஓவர்) உயர்ந்த போது, இந்த ஜோடிக்கு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் ‘செக்’ வைத்தார். அவர் ஷாட்பிட்ச்சாக வீசிய பந்தை ஸ்டோனிஸ் (37 ரன், 53 பந்து, 6 பவுண்டரி) தவறாக கணித்து தூக்கிய போது ‘மிட்விக்கெட்’ திசையில் நின்ற கோலியிடம் பிடிபட்டார்.

இதன் பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. மெதுவான தன்மை (ஸ்லோ) கொண்ட ஆடுகளத்தில், மிடில் ஓவர்களில் அவர்களின் ரன்ரேட்டை இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வெகுவாக கட்டுப்படுத்தினர். கவாஜா 50 ரன்களிலும் (76 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), பீட்டர் ஹேன்ட்ஸ் கோம்ப் 19 ரன்னிலும் வெளியேறினர். எதிர்பார்க்கப்பட்ட கிளைன் மேக்ஸ்வெல் (40 ரன், 51 பந்து, 5 பவுண்டரி) அதிரடியை தொடங்கும் தருணத்தில் வீழ்த்தப்பட்டார். முகமது ஷமியின் பந்து வீச்சில் அவருக்கு ஆப்-ஸ்டம்பு எகிறியது.

ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 173 ரன்களுடன் தத்தளித்தது. இறுதி கட்டத்தில் நாதன் கவுல்டர்-நிலேவும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரியும் இணைந்து அணி 200 ரன்களை கடக்க உதவினர். இவர்கள் 7-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது கவனிக்கத்தக்கது. கவுல்டர் நிலே 28 ரன்களில் கேட்ச் ஆனார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் காரி 36 ரன்களுடன் (37 பந்து, 5 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார்.

அடுத்து களம் புகுந்த இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஷிகர் தவான் (0) 2-வது ஓவரிலேயே கேட்ச் ஆனார். இதன் பின்னர் துணை கேப்டன் ரோகித் சர்மாவும், கேப்டன் விராட் கோலியும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நேர்த்தியாக ஆடிய கோலி, ஆடம் ஜம்பாவின் சுழற்பந்து வீச்சில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் ஓடவிட்டு அடுத்த பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

முதலில் கோலிக்கு (44 ரன், 45 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) நடுவர் எல்.பி.டபிள்யூ. வழங்கவில்லை. பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்து சாதகமான தீர்ப்பை பெற்றனர். மறுமுனையில் ரோகித் சர்மா (37 ரன், 66 பந்து, 5 பவுண்டரி), நாதன் கவுல்டர்-நிலேவின் பவுலிங்கில் லெக்-சைடில் பந்தை திருப்ப முயற்சித்த போது அது பேட்டின் விளிம்பில் பட்டு மேலே எழும்பி கேட்சாக மாறியது. அம்பத்தி ராயுடுவும் (13 ரன்) நிலைக்கவில்லை.

அப்போது இந்திய அணி 99 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை (23.3 ஓவர்) பறிகொடுத்து நெருக்கடிக்குள்ளானது. இதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் டோனியும், கேதர் ஜாதவும் கூட்டணி அமைத்து அணியை சிக்கலில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலிய பவுலர்கள் அவ்வப்போது ஷாட்பிட்ச் பந்துகளை வீசி மிரட்டிப் பார்த்தனர். ஆனாலும் இருவரும் திறம்பட சமாளித்துக் கொண்டனர். சூழ்நிலையை உணர்ந்து பொறுமையுடன் செயல்பட்ட இவர்கள், ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டிற்கு விரட்டியடிக்கவும் தவறவில்லை. இதனால் இந்திய அணி படிப்படியாக நிமிர்ந்தது. ஜாதவ் 5-வது அரைசதத்தையும், டோனி 71-வது அரைசதத்தையும் எட்டி அசத்தினர். கடைசியில் டோனி தொடர்ந்து 2 பவுண்டரிகள் விளாசி இலக்கை எட்ட வைத்து, குழுமியிருந்த 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.

இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி 59 ரன்களுடனும் (72 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேதர் ஜாதவ் 81 ரன்களுடனும் (87 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேகரித்தது கவனிக்கத்தக்கது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த கேதர் ஜாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி வருகிற 5-ந்தேதி நாக்பூரில் நடக்கிறது.

கேப்டன்கள் கருத்து

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். அவர்களால் தான் போட்டியில் வெற்றி பெற முடிந்தது. ஜடேஜா 10 ஓவர்களில் 35 ரன்களுக்கும் குறைவாக விட்டுக்கொடுத்தது வியப்புக்குரியது. டோனியும், கேதர் ஜாதவும் பேட்டிங்கில் பொறுப்புடன் விளையாடினர். அவர்கள் ஆடிய விதத்தை பார்க்கவே மகிழ்ச்சி அளித்தது. அவர்களது பார்ட்னர்ஷிப் அற்புதமானது’ என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ‘நாங்கள் 20 முதல் 30 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். குறிப்பாக 10 ஓவர்களுக்கு பிறகு இன்னும் வேகமாக ரன்கள் எடுத்திருக்க வேண்டும். எங்களது பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசினர். ஆனால் இந்தியா எங்களை விட சிறப்பாக ஆடி விட்டது’ என்றார்.

Next Story