இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட்: 359 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து ஆஸ்திரேலியா வெற்றி தவானின் அதிரடி ‘வீண்’


இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட்: 359 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து ஆஸ்திரேலியா வெற்றி தவானின் அதிரடி ‘வீண்’
x
தினத்தந்தி 10 March 2019 4:25 PM GMT (Updated: 10 March 2019 7:31 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 359 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து சாதனை வெற்றியை ருசித்தது.

மொகாலி, 

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 359 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து சாதனை வெற்றியை ருசித்தது.

4 மாற்றம்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று நடந்தது. இந்திய அணியில் 4 மாற்றமாக அம்பத்தி ராயுடு, முகமது ஷமி, டோனி, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பதிலாக லோகேஷ் ராகுல், புவனேஷ்வர்குமார், ரிஷாப் பான்ட், யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்டோர் இடம் பிடித்தனர்.‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். சில ஓவர்கள் எச்சரிக்கையை கடைபிடித்த இவர்கள் அதன் பிறகு வேகமாக ரன்கள் எடுப்பதில் கவனம் செலுத்தினர். குறிப்பாக தவான் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி காட்டினார். பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் பந்து ஏதுவாக வந்ததால் இருவரும் சவுகரியமாக மட்டையை சுழட்டினர். 9.2 ஓவர்களில் 50 ரன்களை தொட்ட இந்திய அணி 17.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது.

தவான் சதம்

நேர்த்தியாக ஆடிய இந்த ஜோடி ஸ்கோர் 193 ரன்களை (31 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. ரோகித் சர்மா 95 ரன்களில் (92 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய தொடக்க ஜோடியின் அதிகபட்சமாக (193 ரன்) இது பதிவானது. இதற்கு முன்பு இதே கூட்டணி 2013-ம் ஆண்டு நாக்பூரில் நடந்த ஆட்டத்தில் 178 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இதன் பின்னர் 2-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் இறங்கினார். மறு ஓவரில் தவான் பந்தை பவுண்டரிக்கு ஓட விட்டு தனது 16-வது சதத்தை பூர்த்தி செய்தார். முதல் 3 ஆட்டங்களில் சொதப்பியதால் நெருக்கடிக்குள்ளான தவான், இந்த ஆட்டத்தில் மூன்று இலக்கத்தை அடைந்ததும் உற்சாகத்திற்குள்ளானார். அதன் பிறகு மேக்ஸ்வெல்லின் ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர், பெரேன்டோர்ப்பின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். ரன்ரேட்டும் எகிறியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை வறுத்தெடுத்த தவான் 143 ரன்களில் (115 பந்து, 18 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். ஒரு நாள் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இந்தியா 358 ரன்

இதன் பின்னர் வந்த கேப்டன் விராட் கோலி (7 ரன், 6 பந்து) இந்த தடவை ஏமாற்றம் அளித்தார். வைடாக சென்ற பந்தை தேவையில்லாமல் அடித்து விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரியிடம் பிடிபட்டார். சிறிது நேரத்தில் லோகேஷ் ராகுல் 26 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இறுதி கட்டத்தில் ரிஷாப் பான்ட் (36 ரன், 24 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் (26 ரன், 15 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோர் அளித்த கணிசமான பங்களிப்பு இந்திய அணி 350 ரன்களை கடக்க உதவியது. சந்தித்த கடைசி பந்தை பும்ரா சிக்சருக்கு பறக்க விட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் 3-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஹேன்ட்ஸ்கோம்ப் செஞ்சுரி

அடுத்து இமாலய இலக்கை நோக்கி களம் புகுந்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் (0) அடுத்து வந்த ஷான் மார்ஷ் (6 ரன்) இருவரும் கிளன் போல்டு ஆனார் கள். இதன் பின்னர் உஸ்மான் கவாஜாவும், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப்பும் இணைந்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய இவர்கள் போக போக ரன்வேகத்தை தீவிரப்படுத்தினர். பேட்டிங்குக்கு சொர்க்கபுரியாக திகழ்ந்த இந்த ஆடுகளத்தில் இந்திய பவுலர்களால் தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை. இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 192 ரன்கள் திரட்டி அணிக்கு நம்பிக்கை அளித்தனர்.

உஸ்மான் கவாஜா 91 ரன்களில் (99 பந்து, 7 பவுண்டரி) வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 23 ரன்னில் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயற்சித்து எல்.பி.டபிள்யூ. ஆனார். இதற்கு மத்தியில், இன்னொரு முனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் நிலைகொண்டு ஆடிய பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் தனது ‘கன்னி’ சதத்தை எட்டினார். மேக்ஸ்வெல்லுக்கு பிறகு வந்த ஆஷ்டன் டர்னர், இந்திய பந்து வீச்சை நொ றுக்கித் தள்ளினார். பேட் டில் பட்ட பந்துகள் எல்லைக்கோட்டை நோக்கி தெறித்து ஓடின. பல கட்டத்தில் பீல்டிங்கில் கோட்டை விட்ட இந்திய வீரர்கள் ஏதோ ரசிகர்கள் போன்று வேடிக்கை பார்த்தது மட்டுமே மிச்சம்.

டர்னரின் ஆக்ரோஷமான பேட்டிங், 10 ஓவர்களில் 98 ரன்கள் தேவை என்ற நிலையை 5 ஓவர்களில் 42 ரன்கள் தேவை என்று மாற்றியது. இதற்கிடையே ஹேன்ட்ஸ்கோம்ப் 117 ரன்களில் (105 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து களம் கண்ட விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரி டர்னருக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார். கடைசி கட்டத்தில் புவனேஷ்வர்குமாரை அலற வைத்த ஆஷ்டன் டர்னர் அவரது 2 ஓவர்களில் மட்டும் 3 சிக்சர், 2 பவுண்டரி சாத்தினார். இதனால் ஆட்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் முழுமையாக திரும்பியது. வெற்றியை நெருங்கிய சமயத்தில் அலெக்ஸ் காரி 21 ரன்களில் கேட்ச் ஆனார்.

ஆஸ்திரேலியா சாதனை வெற்றி

ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 359 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹீரோவாக ஜொலித்த 26 வயதான ஆஷ்டன் டர்னர் 84 ரன்களுடன் (43 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) களத்தில் இருந்தார். டர்னருக்கு 38 ரன்னில் ஸ்டம்பிங் வாய்ப்பை ரிஷாப் பான்டும், 80 ரன்னில் எளிய கேட்ச் வாய்ப்பை ஷிகர் தவானும் நழுவ விட்டது கவனிக்கத்தக்கது. ஒரு நாள் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச ஸ்கோர் இது தான். 2007-ம் ஆண்டில் பாகிஸ்தானும், 2017-ம் ஆண்டில் இலங்கையும் 322 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்ததே, இதற்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக ஒரு அணியின் அதிகபட்ச சேசிங்காக இருந்தது. இதே போல் ஆஸ்திரேலிய அணிக்கும் இது தான் உயரிய ‘சேசிங்’ ஆகும்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-2 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி டெல்லியில் வருகிற 13-ந்தேதி நடக்கிறது.

கோலி சொல்வது என்ன?

தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘ஆடுகளத்தன்மை போட்டி முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது. கடைசி 2 ஆட்டத்திலும் பனிப்பொழிவு குறித்த தவறான கணிப்பால் (3-வது ஆட்டத்தில் இரவில் பனியின் தாக்கம் இல்லை. இந்த ஆட்டத்தில் இரவில் பனிப்பொழிவு அதிகம் இருந்தது) வீழ்ந்து விட்டோம். பனிப்பொழிவால் பந்து ஈரமானதால், சரியாக பவுலிங் செய்ய முடியாமல் எங்களது பவுலர்கள் சிரமப்பட்டனர். எங்களது பீல்டிங்கும் மந்தமாகவே இருந்தது. அதே சமயம் ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை விட சிறப்பாக ஆடியதை ஒப்புக் கொள்ள வேண்டும். வெற்றிக்கு அவர்கள் தகுதியான அணி. அந்த அணியில் ஆஷ்டன் டர்னர், ஹேன்ட்ஸ்கோம்ப், கவாஜா அருமையாக ஆடினர்.’ என்றார்.

தவான்-ரோகித் ஜோடி சாதனை

* ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 27-வது முறையாக 350 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இந்த இலக்கை அதிக முறை கடந்த தென்ஆப்பிரிக்காவை (27 முறை) இந்தியா சமன் செய்துள்ளது.

* தவான்-ரோகித் சர்மா ஜோடியாக மொத்தம் 4,571 ரன்கள் எடுத்துள்ளனர். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகளின் பட்டியலில் தவான்-ரோகித் இணை 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த வகையில் தெண்டுல்கர்-கங்குலி (8,227 ரன்) முதலிடத்திலும், ஷேவாக்-தெண்டுல்கர் (4,387 ரன்) ஜோடி 3-வது இடத்திலும் உள்ளது.

* ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி முதலில் பேட் செய்து 350 ரன்களுக்கு மேல் குவித்து தோல்வியை சந்திப்பது இதுவே முதல்முறை.

* இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 2 ஒரு நாள் போட்டிகளில் தோற்பது 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

Next Story