மும்பையின் பந்து வீச்சில் சுருண்டது ஐதராபாத் - 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி


மும்பையின் பந்து வீச்சில் சுருண்டது ஐதராபாத் - 40 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
x
தினத்தந்தி 6 April 2019 6:10 PM GMT (Updated: 6 April 2019 10:31 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் 137 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் பலம் வாய்ந்த ஐதராபாத் அணி தோல்வியை தழுவியது.

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்சும், மும்பை இந்தியன்சும் மோதின. மும்பை அணியில் யுவராஜ்சிங், மலிங்கா ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக அறிமுக வீரராக அல்ஜாரி ஜோசப், இஷான் கிஷன் இடம் பிடித்தனர். இதில் ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர்குமார், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய மும்பை பேட்ஸ்மேன்கள், ஐதராபாத்தின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினர். முதல் ஓவரில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா அந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறினார். அவர் 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் குயின்டான் டி காக் 19 ரன்னில் கேட்ச் ஆனார்.

அதன் பிறகு மும்பை அணியின் விக்கெட்டுகள் மளமளவென உருண்டன. சகோதரர்கள் குருணல் பாண்ட்யா (6 ரன்), ஹர்திக் பாண்ட்யாவும் (14 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் 97 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து தள்ளாடிய மும்பை அணியை கடைசி நேரத்தில் கீரன் பொல்லார்ட் தாங்கிப்பிடித்தார். 19-வது ஓவரில் சித்தார்த் கவுலின் பந்து வீச்சில் 3 சிக்சர்களை தெறிக்க விட்ட பொல்லார்ட், புவனேஷ்வர்குமாரின் இறுதி ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார்.

20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் 46 ரன்களுடன் (26 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். ஐதராபாத் தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், ரஷித்கான், முகமது நபி, சந்தீப் ஷர்மா, புவனேஷ்வர்குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணி 17.4 ஓவர்களில் வெறும் 96 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பெற்றது. நட்சத்திர வீரர்கள் பேர்ஸ்டோ 16 ரன்னிலும், வார்னர் 15 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

மும்பை அணியின் புதுமுக வேகப்பந்து வீச்சாளர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த 22 வயதான அல்ஜாரி ஜோசப் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

Next Story