ஐ.பி.எல் கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி


ஐ.பி.எல் கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
x
தினத்தந்தி 3 May 2019 5:59 PM GMT (Updated: 2019-05-04T04:27:04+05:30)

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது. #KXIPvKKR

மொகாலி,

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெருங்கி விட்டது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு 4 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் மொகாலியில் நேற்றிரவு அரங்கேறிய 52-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், கொல்கத்தா நைட் ரைடர்சும் கோதாவில் குதித்தன. ‘டாஸ்’ ஜெயித்த கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதன்படி கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. அதிரடி மன்னர்கள் லோகேஷ் ராகுல் (2 ரன்), கிறிஸ் கெய்ல் (14 ரன்) இருவரையும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் காலி செய்தார். இதன் பின்னர் மயங்க் அகர்வாலும், நிகோலஸ் பூரனும் இணைந்து ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். ரஸ்செல், பியூஸ் சாவ்லா ஆகியோரது ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்ட நிகோலஸ் பூரன் 48 ரன்களில் (27 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அவரது வெளியேற்றத்துக்கு பிறகு பஞ்சாப்பின் ரன்ரேட் கொஞ்சம் தளர்ந்தது. மயங்க் அகர்வால் 36 ரன்களில் ரன்-அவுட் ஆனார்.

இதைத் தொடர்ந்து மன்தீப் சிங்கும், சாம் குர்ரனும் ஜோடி சேர்ந்து கடைசி கட்டத்தில் பஞ்சாப் அணியின் ஸ்கோரை அதிகரிக்க செய்வதில் முனைப்பு காட்டினர். மன்தீப்சிங் 25 ரன்னில் (ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் அஸ்வின் (0) கிளன் போல்டு ஆனார். இதைத் தொடர்ந்து ஹாரி குர்னே வீசிய கடைசி ஓவரில் சாம் குர்ரன் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டி உள்ளூர் ரசிகர்களை பரவசப்படுத்தியதோடு அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கும் வித்திட்டார்.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. 17 ரன்னில் எளிதான கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த சாம் குர்ரன் 55 ரன்களுடன் (24 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.

அடுத்து 184 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணி ஆடியது. அதிரடி காட்டிய கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் தொடக்க விக்கெட்டுக்கு ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவரில் 62 ரன்களை திரட்டி மிரள வைத்தனர். கிறிஸ் லின் 46 ரன்களில் (22 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ராபின் உத்தப்பா தனது பங்குக்கு 22 ரன்கள் எடுத்தார்.

மறுமுனையில் அட்டகாசப்படுத்திய இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் அரைசதம் அடித்தார். இதற்கிடையே 3-வது விக்கெட்டுக்கு வந்த ‘சூறாவளி பேட்ஸ்மேன்’ ஆந்த்ரே ரஸ்செல் சிறிது நேரமே நின்றாலும் 24 ரன்கள் (2 சிக்சர், 2 பவுண்டரி) விளாசினார்.

இதன் பின்னர் சுப்மான் கில்லும், கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் கைகோர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சுப்மான் கில் 65 ரன்களுடனும் (49 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 21 ரன்களுடனும் (9 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

13-வது ஆட்டத்தில் விளையாடி 6-வது வெற்றியை பெற்ற கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டு இருக்கிறது. அதே சமயம் 8-வது தோல்வியை தழுவிய பஞ்சாப் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது.


Next Story