ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி வெற்றியோடு வெளியேறியது பஞ்சாப் அணி


ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி வெற்றியோடு வெளியேறியது பஞ்சாப் அணி
x
தினத்தந்தி 5 May 2019 1:57 PM GMT (Updated: 2019-05-06T01:03:04+05:30)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ஆறுதல் வெற்றியோடு போட்டியை விட்டு வெளியேறியது. #KXIPvCSK

மொகாலி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மாலை மொகாலியில் நடந்த 55-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் கேப்டன் அஸ்வின் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

இதன்படி ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிஸ்சும் சென்னை அணியின் இன்னிங்சை தொடங்கினர். வாட்சன் 7 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, பிளிஸ்சிஸ்சுடன் கைகோர்த்தார். அவ்வப்போது பவுண்டரி, சிக்சர் ஓடவிட்ட இவர்கள் ஸ்கோரை சீரான வேகத்தில் நகர்த்தினர். 12.5 ஓவர்களில் சென்னை அணி 100 ரன்களை தொட்டது. அதன் பிறகு முருகன் அஸ்வின், ஆண்ட்ரூ டையின் ஓவர்களில் இருவரும் இணைந்து 4 பவுண்டரியும், 2 சிக்சரும் நொறுக்கித் தள்ளினர். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது சென்னை அணி 190 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ரன்ரேட் சரிவுக்குள்ளானது.

அணியின் ஸ்கோர் 150 ரன்களாக (16.4 ஓவர்) உயர்ந்த போது சுரேஷ் ரெய்னா 53 ரன்களில் (38 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிளிஸ்சிஸ் 96 ரன்களில் (55 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்), சாம் குர்ரன் வீசிய மிரட்டலான யார்க்கரில் தடுமாறி வீழ்ந்தார். பந்து அவரது காலில் பட்டு ஸ்டம்பை பதம் பார்த்தது. ஐ.பி.எல்.-ல் பிளிஸ்சிஸ்சின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கடைசி ஓவரில் சென்னை அணி மேலும் இரு விக்கெட்டுகளை இழக்க, ரன்வேகம் வெகுவாக குறைந்து போனது. அதாவது கடைசி 4 ஓவர்களில் சென்னை அணி வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்தது.

20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. டோனி 10 ரன்களுடன் (12 பந்து) களத்தில் இருந்தார். பஞ்சாப் தரப்பில் சாம் குர்ரன் 3 விக்கெட்டுகளும், முகமது ஷமி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்லும், லோகேஷ் ராகுலும் அடியெடுத்து வைத்தனர். தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரில் 5 பந்துகளை தடுத்து ஆடிய லோகேஷ் ராகுல் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பினார். அதன் பிறகு ராகுல் ருத்ரதாண்டவம் ஆடினார். ஹர்பஜன்சிங்கின் சுழற்பந்து வீச்சில் 2 சிக்சர் விரட்டிய அவர், ஹர்பஜன்சிங்கின் மற்றொரு ஓவரில் 3 பவுண்டரியும், 2 சிக்சரும் துவம்சம் செய்தார். 4 ஓவர்களில் பஞ்சாப் அணி 57 ரன்களை எட்டிய போது, ராகுல் 19-வது பந்தில் அரைசதத்தை கடந்து விட்டார். நடப்பு தொடரில் 3-வது அதிவேக அரைசதம் இதுவாகும்.

பேட்டிங்குக்கு சாதகமாக காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் சென்னை பவுலர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை.

இருப்பினும் 14.2 ஓவருக்குள் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் தங்கள் அணி புள்ளி பட்டியலில் டெல்லிக்கு கீழாக இறங்க வேண்டி இருக்கும் என்பதை தெளிவாக அறிந்திருந்த சென்னை கேப்டன் டோனி, எதிரணியை கொஞ்சமாவது கட்டுப்படுத்த பீல்டிங், பந்து வீச்சில் அடிக்கடி மாற்றங்களை செய்தார். தொடக்க ஜோடி வெளியேற்றப்பட்டதும், ஒரு வழியாக அந்த ஆபத்து நீங்கியது.

9 ஓவர்களில் பஞ்சாப் அணி 100 ரன்களை தாண்டியது. அணியின் ஸ்கோர் 108 ரன்களை எட்டிய போது இருவரும் ஹர்பஜன்சிங் வீசிய சுழல் வலையில் சிக்கினர். ராகுல் 71 ரன்களிலும் (36 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), கெய்ல் 28 ரன்களிலும் (28 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினர். அதன் பிறகு மேலும் இரு விக்கெட்டுகளை சென்னை பவுலர்கள் சாய்த்தாலும் அதனால் எந்த பலனும் இல்லை.

பஞ்சாப் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட பஞ்சாப் அணிக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. அந்த அணி புள்ளி பட்டியலில் 6 வெற்றி, 8 தோல்வி என்று 12 புள்ளியுடன் 6-வது இடத்தை பிடித்தது.

அதே சமயம் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை உறுதி செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் விளையாட உள்ளது. நாளை சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதலாவது தகுதி சுற்றில் சென்னை அணி, மும்பையை சந்திக்கிறது.

சென்னை வீரர் கேதர் ஜாதவ் காயம் - எஞ்சிய போட்டியில் ஆடமாட்டார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பந்தை தடுக்க பாய்ந்து விழுந்த போது (14-வது ஓவர்) இடது தோள்பட்டையில் காயம் அடைந்தார். வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக வெளியேறினார். அதன் பிறகு பீல்டிங் செய்ய வரவில்லை. காயத்தன்மை குறித்து அறிய இன்று ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. அவரை பார்க்கும் போது, எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் (அதாவது பிளே-ஆப் சுற்றில்) விளையாட வாய்ப்பில்லை என்றே தோன்றுவதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நேற்றிரவு தெரிவித்தார். உலக கோப்பை போட்டி நெருங்குவதால் 34 வயதான கேதர் ஜாதவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிகிறது.


Next Story