செப்டம்பரில் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து


செப்டம்பரில் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து
x
தினத்தந்தி 8 July 2020 7:45 PM GMT (Updated: 2020-07-09T00:51:12+05:30)

செப்டம்பரில் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்று இருந்தாலும், அந்த உரிமையை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு விட்டுக்கொடுப்பதாகவும், அதற்கு பதிலாக அடுத்த ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், அதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி இன்ஸ்டாகிராம் நேரலையில் நேற்று பேசுகையில், ‘செப்டம்பர் மாதம் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு இருக்கிறது’ என்று தெரிவித்தார். கொரோனா பரவலால் ஆசிய கோப்பை போட்டியை ரத்து செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணியும் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுவது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆசிய கோப்பை போட்டி ரத்தாகி இருப்பதன் மூலம் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அரங்கேறுவதில் இருந்த தடை நீங்கி இருப்பதாக கருதப்படுகிறது.

Next Story