ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு இன்று முக்கிய ஆலோசனை; போட்டி அட்டவணை, பாதுகாப்பு வழிமுறைகள் வெளியாகுமா?


ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு இன்று முக்கிய ஆலோசனை; போட்டி அட்டவணை, பாதுகாப்பு வழிமுறைகள் வெளியாகுமா?
x
தினத்தந்தி 1 Aug 2020 10:35 PM GMT (Updated: 1 Aug 2020 10:35 PM GMT)

போட்டி அட்டவணை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.

மும்பை,

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 8-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிக்கொண்டே போவதால் வேறு வழியின்றி இந்த முறை ஐ.பி.எல். போட்டி அமீரகத்துக்கு மாற்றப்பட்டு விட்டது. ஆனால் அமீரகத்தில் போட்டியை நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் விண்ணப்பம் அளித்தும் மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

இதற்கிடையே, போட்டி அட்டவணையை இறுதி செய்வதற்காக ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசிக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். போட்டி அட்டவணை உறுதி செய்யப்பட்டதும் அது உடனடியாக வெளியிடப்படுமா? என்பது சந்தேகம் தான். ஆனால் அணி நிர்வாகிகளுக்கும், போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். சீன நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப்பை தொடர்ந்து வைத்திருப்பதா? வேண்டாமா? என்பதும் இன்றைய விவாதத்தில் முக்கிய விஷயமாக இடம் பெறுகிறது.

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் ஐ.பி.எல். போட்டி நடக்க இருப்பதால் வீரர்கள் மற்றும் போட்டியில் தொடர்புடைய அனைவரின் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய 240 பக்கம் கொண்ட அவர்களுக்குரிய பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் தயாராகி வருகிறது. அது குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், அணிகளுக்கு வழங்கப்படும்.

இதன்படி உயிர் மருத்துவ பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டு வீரர்கள், அணிகளின் நிர்வாகிகள், தொடரில் பணியாற்ற உள்ள ஊழியர்கள், அவர்கள் தங்கும் ஓட்டலில் உள்ள ஊழியர்கள், பேருந்து ஓட்டுனர்கள், ஒளிபரப்பு குழுவினர் அனைவரும் அந்த சூழலில் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். பாதுகாப்பு வளையத்தை விட்டு யாரேனும் விலகினால் மீண்டும் ஐ.பி.எல். போட்டியில் நுழைய முடியாத அளவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தெரிகிறது.

பொதுவாக ஒவ்வொரு அணியிலும் 25 முதல் 28 வீரர்கள் அங்கம் வகிப்பார்கள். இவர்களோடு தலைமை பயிற்சியாளர், உதவியாளர்கள் என 15 பேர் வரை உடன் வருவார்கள். தற்போதைய சூழலில் இந்த எண்ணிக்கையை ஓரளவு குறைத்தால் நெருக்கடியை சமாளிக்க முடியும் என்பதால் அது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

போட்டியின் போது எந்த வீரராவது கொரோனா தொற்றுக்கு ஆளானால் அந்த அணியை சேர்ந்த வீரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி சோதனை நடத்த வேண்டி வரும். அத்தகைய நிலைமையில் அந்த அணிக்குரிய அடுத்த ஆட்டம் ரத்து செய்யப்படுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்ற குழப்பம் அணி நிர்வாகிகள் மத்தியில் உள்ளது.

இதே போல் தங்களது போட்டிகளை முடித்துக் கொண்டு ஐ.பி.எல். தொடருக்கு கடைசி நேரத்தில் வருகை தர உள்ள ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்களா? அப்படி என்றால் அது எத்தனை நாட்கள், ஒவ்வொரு வீரர்களுக்கும் எத்தனை முறை கொரோனா சோதனை நடத்தப்படும்? வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் தங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுமா? திடீரென போட்டியை விட்டு விலகும் வீரருக்கு பதிலாக மாற்று வீரர்களை சேர்க்க அனுமதி உண்டா? கொரோனா அச்சத்தால் தென்ஆப்பிரிக்காவில் எல்லைகள் மூடப்பட்டு விட்டதால் அந்த நாட்டு வீரர்களை எப்படி போட்டிக்கு அழைத்து வருவது? உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஐ.பி.எல். கூட்டத்தில் ஆலோசித்து தெளிவான திட்டம் வகுத்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story