ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங் தேர்வு


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 2 Dec 2020 3:27 AM GMT (Updated: 2020-12-02T08:57:45+05:30)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியின் ஆடும் லெவனில் தமிழக வீரர் நடராஜன் இடம் பிடித்துள்ளார்.

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ரன் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் இந்திய அணி இந்தப் போட்டியை  எதிர்கொள்கிறது. 

ஆஸ்திரேலிய அணியும் இந்தியாவை ஒயிட் வாஷ் செய்ய தீவிரம் காட்டும் எனத்தெரிகிறது.  இந்தப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.  ஐபிஎல் தொடரில் கலக்கிய தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார். முகம்மது சமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:

இந்தியா: ஷிகர் தவான், சுப்மான் கில், விராட் கோலி (கேப்டன்), கே.எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், பும்ரா, நடராஜன்,

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச்,  ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், மோசஸ் ஹென்ரிக்ஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, சீன் அப்போட்,ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசல்வுட், கேமரூன் க்ரீன், அஷ்டோன் அகர்,

Next Story