ஆஷஸ் தொடர்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு


ஆஷஸ் தொடர்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு
x
தினத்தந்தி 7 Dec 2021 11:42 PM GMT (Updated: 2021-12-08T05:12:36+05:30)

ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

பிரிஸ்பேன், 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். இதன்படி ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சைத் தொடங்க உள்ளது. 

பாரம்பரிய மிக்க ஆஷஸ் கோப்பை தொடருக்காக இரு அணியினரும் முனைப்புடன் தயாராகி இருக்கிறார்கள். 2 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி தொடரில் கடைசியாக 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. வலுவான இரு அணிகளும் கோப்பையை கைப்பற்ற வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டி தொடரில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஷஸ் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய லெவன் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

இங்கிலாந்து அணியின் வீரர்கள் பட்டியல்: - 

ஜோ ரூட் (கேப்டன்), ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஹசீப் ஹமீது, ஜாக் லீச், டேவிட் மலான், ஆலி போப், ஆலி ராபின்சன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், மார்க்வுட்.

ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் பட்டியல்:- 

டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மார்னஸ் லாபஸ்சேங், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ்ஹேட், கேமரான் கிரின், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ்  (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயான், ஜோஷ் ஹேசல்வுட்.

இதனிடையே ஆஷஸ் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பணிச்சுமையை கருத்தில் கொண்டும், அடிலெய்டில் 16-ந் தேதி தொடங்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு முழுமையாக தயாராகுவதற்கு வசதியாகவும் அவருக்கு இந்த ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு காயம் எதுவுமில்லை. அவர் விளையாடுவதற்குரிய நல்ல உடல் தகுதியுடன் தான் இருக்கிறார். நாங்கள் அடுத்த 6 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டியது இருக்கிறது. எனவே ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை. அவர் அடிலெய்டில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டிக்கு சிறப்பாக தயாராகுவதற்கு போதிய காலஅவசாகம் அளிக்கும் நோக்கில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து அணியினருடன் பயிற்சியில் ஈடுபடுவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

39 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 166 டெஸ்டில் விளையாடி 632 விக்கெட்டுகள் வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் முரளிதரன் (இலங்கை), வார்னே (ஆஸ்திரேலியா) ஆகியோருக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தில் இருக்கிறார். கடைசியாக 2010-11-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியதில் ஆண்டர்சன் முக்கிய பங்கு வகித்தார். அவர் அந்த தொடரில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி டெஸ்ட் இடமாற்றம்

இதற்கிடையே, பெர்த்தில் ஜனவரி 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்க திட்டமிடப்பட்டு இருந்த 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்துக்கு உட்பட்ட பெர்த்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமலில் இருப்பதால் அங்கு செல்லுபவர்கள் 14 நாள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி ஹோபர்ட் அல்லது மெல்போர்னில் நடத்தலாமா? என்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த போட்டி ஹோபர்ட்டில் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story