ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 425 ரன்களுக்கு ஆல் அவுட்


ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 425 ரன்களுக்கு ஆல் அவுட்
x
தினத்தந்தி 10 Dec 2021 1:50 AM GMT (Updated: 2021-12-10T07:20:32+05:30)

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ்சில் 425 ரன்னுக்கு ஆட்டமிழந்துள்ளது.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50.1 ஓவர்களில் 147 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் பிறகு மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், மார்கஸ் ஹாரிசும் களம் புகுந்தனர். ஹாரிஸ் (3 ரன்) ஆலி ராபின்சனின் பந்து வீச்சில் ‘ஸ்லிப்’பில் நின்ற டேவிட் மலானிடம் பிடிபட்டார். அடுத்து மார்னஸ் லபுஸ்சேன், வார்னருடன் கைகோர்த்தார்.

வார்னர் 17 ரன்னில் இருந்த போது, ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். ஆனால் டி.வி. ரீப்ளேயில் ஸ்டோக்ஸ் கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ-பாலாக வீசியது கண்டறியப்பட்டது. இந்த அதிர்ஷ்டத்தால் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை பெற்ற வார்னர் 48 ரன்னில் ஸ்லிப்பில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பினார். 60 ரன்னில் மிக சுலபமான ரன்-அவுட் கண்டத்தில் இருந்தும் தப்பிபிழைத்தார். இறுதியில் வார்னர் 6 ரன்னில் 25-வது சதத்தை தவறவிட்டார்.

இந்த சூழலில் மிடில் வரிசையில் களம் கண்டு நிலைத்து நின்று ஆடிய டிராவிஸ் ஹெட் இங்கிலாந்து பந்து வீச்சை நொறுக்கித் தள்ளினார். ஒரு நாள் போட்டி போன்று அதிரடியாக விளையாடி ரன்களை சேகரித்த அவர் 85 பந்துகளில் தனது 3-வது சதத்தை நிறைவு செய்தார். ஆஷஸ் வரலாற்றில் இது 3-வது அதிவேக சதமாகும். அதே சமயம் இந்த மைதானத்தில் ஒரு வீரரின் மின்னல்வேக சதமாக அமைந்தது. 

 2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 84 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்த நிலையில் 3- வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்த நிலையில் மார்க் உட் பந்தில் போல்டானார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 104.3 ஓவர்களில் 425 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் மார்க் உட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 278 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் விளையாடி வருகிறது.


Next Story