பாகிஸ்தான் சென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா.!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Dec 2021 2:29 AM GMT (Updated: 12 Dec 2021 2:29 AM GMT)

பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கராச்சி, 

மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி விமானம் மூலம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகருக்கு சென்றது. 2018-ம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறையாகும். 

3 மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி நியூசிலாந்து அணி தனது பாகிஸ்தான் தொடரை கடைசி நேரத்தில் முறித்து கொண்டு களம் இறங்காமல் நாடு திரும்பியது. இதனால் பாகிஸ்தான் சென்றடைந்த மேற்கிந்திய தீவுகள் அணியினர் விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தாங்கள் தங்கும் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது இருபது ஓவர் போட்டி கராச்சியில் தொடங்குகிறது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள ஒருவருக்கும் ராஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், கைல் மேயர்ஸ் ஆகிய மூன்று வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜானி கிரேவ் கூறுகையில், "எங்கள் அணியின் மூன்று வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அணிக்கு சிறிது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அணியில் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள். பாதிக்கப்பட்வர்களுக்கு அறிகுறி ஏதும் இல்லை. ஓட்டல் அறையில் அறையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது மருத்துவரின் மேற்பார்வையில் உள்ளனர். தொற்றிலிருந்து குணமடையும் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர். எனினும் மற்ற வீரர்கள் ஆட்டத்திற்காக தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகின்றனர்". இவ்வாறு அவர் கூறினார்.

Next Story