சாதனை படைத்த முகமது ஷமி... ரோகித் சர்மா டுவிட்டர் பதிவு சர்ச்சையானது


சாதனை படைத்த முகமது ஷமி... ரோகித் சர்மா டுவிட்டர் பதிவு சர்ச்சையானது
x
தினத்தந்தி 29 Dec 2021 5:29 AM GMT (Updated: 2021-12-29T10:59:56+05:30)

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 200 விக்கெட் வீழ்த்திய 5-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் முகமது ஷமி

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது டெஸ்ட் செஞ்சூரியனில் கடந்த 26 ஆம் தேதி  தொடங்கியது. இப்போட்டியில் ‘டாஸ்’ வென்ற  இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டம்  ஒரு பந்து கூட வீச முடியாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நேற்று நடந்த 3-ஆம் நாள் ஆட்டதில் இந்திய அணி 105.3 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து தங்கள் முதல் இன்னிங்க்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.130 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸ்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்து வலுவான முன்னிலையில் உள்ளது. 

இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 200 விக்கெட் (55 டெஸ்ட்) வீழ்த்திய 5-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் கபில்தேவ், ஜாகீர்கான், இஷாந்த் ஷர்மா, ஜவஹல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு பிறகு 200 விக்கெட் வீழ்த்திய வீரராக ஷமி திகழ்கிறார்.

200 விக்கெட் கைப்பற்றிய முகமது ஷமிக்கு பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்கள் நேற்று வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் ஷமி தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்ட கருத்து  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரோகித் சர்மா தனது டுவிட்டர்  பக்கத்தில், " 200 என்பது சிறப்பான எண் " என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 முறை 200 ரன்களை கடந்த உலகின் ஒரே வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா தன்வசம் வைத்துள்ளார். இந்த நிலையில் முகமது ஷமி எடுத்த 200 விக்கெட்களுக்கு அவரை பாராட்டி
குறிப்பிடாமல் , தன்னுடைய தற்பெருமையை ரோகித் சர்மா
சுட்டிக்காட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story