மார்ச் 26-ல் தொடங்கும் ஐ.பி.எல். போட்டிகள்: முதற்கட்டமாக 40 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி


மார்ச் 26-ல் தொடங்கும் ஐ.பி.எல். போட்டிகள்: முதற்கட்டமாக 40 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி
x
தினத்தந்தி 24 Feb 2022 5:54 PM GMT (Updated: 2022-02-24T23:24:22+05:30)

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.

மும்பை,

10 அணிகள் கொண்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது. 

ஐ.பி.எல்-ன் முதற்கட்ட போட்டிகளில் 40 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு கூட்டத்திற்கு பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல், இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ம் தேதி சனிக்கிழமை தொடங்கும் என அறிவித்தார். 

இந்த ஆண்டு லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்ட நிலையில், மும்பையின் வான்கடே ஸ்டேடியம், பிரபோர்ன் ஸ்டேடியம், நவி மும்பையின் டிஒய் பாட்டீல் மைதானம் மற்றும் புனேவில் உள்ள கஹுஞ்சே ஸ்டேடியம் ஆகியவற்றில் 74 போட்டிகள் நடைபெற உள்ளன.

மகாராஷ்டிரா மாநில அரசால் நிர்ணயிக்கப்பட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களின்படி ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். முதலில் 40 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருக்கும் நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், முழு அளவில் ரசிகர்கள் அனுமதிக்கப்படலாம் என  தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் மைதானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே போல் இறுதிப் போட்டியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.


Next Story