ஐபிஎல்: பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார்? அணி நிர்வாகம் அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 March 2022 12:01 PM GMT (Updated: 12 March 2022 12:10 PM GMT)

பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெங்களூரு,

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது வரும் 26 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி ஏற்கெனவே விலகினார்.

இதையடுத்து பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக பாப் டு பிளெஸ்சியை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, டேனியல் கெவின் பீட்டர்சன், வெட்டோரி, ஷேன் வாட்சன் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அடுத்தபடியாக டு பிளெஸ்சிஸ் கேப்டன் பொறுப்பினை ஏற்கிறார். 

டி20 போட்டிகளில் கேப்டன் பதவியேற்பது டு பிளஸ்சிசுக்கு இது புதிதல்ல. அவர் இதற்கு முன்பு கொமிலா விக்டோரியன்ஸ், பார்ல் ராக்ஸ், செயின்ட் கிட்ஸ், நெவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் ஆகிய டி20 அணிகளுக்கு கேப்டனாக பதவி வகித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காகவும் கேப்டன் பதவி வகித்தவர் என்பதால், அவருக்கு கேப்டன் பதவிக்கான அனுபவம் அதிகம் உண்டு.

டு பிளெஸ்சிஸ், கடந்த சீசன்களின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல்-ல் இதுவரை 100 போட்டிகளில் (93 இன்னிங்ஸ்) விளையாடி 22 அரை சதங்களுடன் 34.94 சராசரி 131.08 ஸ்ட்ரைக் ரேட்டில் 2935 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல்லின் கடைசி நான்கு சீசன்களில், அவர் 47 இன்னிங்ஸ்களில் 1640 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு மட்டும் அவர் அதிகபட்சமாக 633 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story