பகலிரவு டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 28-1


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 March 2022 4:23 PM GMT (Updated: 13 March 2022 4:23 PM GMT)

இலங்கை அணி வெற்றிபெற இன்னும் 419 ரன்கள் தேவைப்படுகிறது.

பெங்களூரு, 

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேனான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக  நேற்று தொடங்கியது . இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

அதன்படி  முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 10 விக்கெட்டுக்களை இழந்து 252 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் எடுத்தார்.    

இதையடுத்து தனது முதல் இன்னிங்சில்  களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க  முடியமால் தடுமாறியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 30 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்தது. 

இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்த இலங்கை 35.5 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை இழந்து 109 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்தார்  இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இதனை தொடர்ந்து இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கோலி 13 ரன்னில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட், அதிரடியாக விளையாடி குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அவர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் அய்யர் 67 ரன்கள் குவித்தார். 

இந்திய அணி இரண்டாம் இன்னிங்சில் 68.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி இலங்கை அணிக்கு 447 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. 

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி  இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிபெற இன்னும் 419 ரன்கள் தேவைப்படுகிறது. இன்னும் மூன்று நாட்கள் இருப்பதாலும், கடின இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருவதாலும், இந்த போட்டி இந்தியாவிற்கே சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story